UPDATED : நவ 06, 2026 07:37 PM
ADDED : நவ 06, 2026 06:24 PM

புதுச்சேரி: நகர்ப்புற குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறைக்கு ஆற்றிய சேவைக்காக டாக்டர் தீனதயாளனுக்கு பொதுச் சேவை விருது வழங்கப்பட்டது.
மத்திய அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ், டில்லியில் செயல்பட்டு வரும் மத்திய பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் அமைப்பில் ஆலோசகராக புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் தீனதயாளன் பணியாற்றி வருகிறார்.
இந்தியாவில் நகர்ப்புற குடிநீர் வழங்கல், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறைகளின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். இவர் 39 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பணியில் அனுபவம் கொண்டவர்.
குடிநீர்த் துறையில் அவர் ஆற்றிய சிறப்புமிக்க தொழில்முறைப் பங்களிப்புகளைப் பாராட்டி, கடந்த 2ம் தேதி டில்லியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், அமெரிக்கன் வாட்டர் வொர்க்ஸ் அசோசியேஷன் – இந்தியா அமைப்பின் சார்பில், டாக்டர் தீனதயாளனுக்கு வாழ்நாள் பொதுச் சேவை விருதுவழங்கப்பட்டது.
நகர்ப்புற குடிநீர் வழங்கல், குடிநீரின் தரம், சுகாதாரம் மற்றும் நிலையான குடிநீர் சேவைகளை மேம்படுத்துதல் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்புகளுக்கு அங்கீகாரத்துடன் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இவர், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் கடந்த 2024-ம் ஆண்டு வெளியிடப்பட்ட “தேசிய குடிநீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு அமைப்புகள் கையேடு” தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் தலைவராக இருந்தவர்.
இத்தகவலை புதுச்சேரி பொதுப்பணித் துறையின் ஓய்வுபெற்ற கண்காணிப்புப் பொறியாளர் சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
