தீபாவளி பண்கையை முன்னிட்டு.... வெளி நாடுகளுக்கு பறக்கும் புதுச்சேரி பலகாரங்கள்
தீபாவளி பண்கையை முன்னிட்டு.... வெளி நாடுகளுக்கு பறக்கும் புதுச்சேரி பலகாரங்கள்
UPDATED : அக் 31, 2026 07:21 PM
ADDED : அக் 31, 2026 07:17 PM

வெளிநாட்டில் வாழும் சொந்தங்களுக்கு, ஊரிலிருந்து நம்ம கைப்பட சுட்ட தீபாவளிப் பலகாரமும், புதுத் துணியும் போய் சேரும்போது அவங்க முகத்துல பார்க்கிற அந்தச் சிரிப்பும் சந்தோஷமும்... அப்பப்பா, அதை வார்த்தைகளால அளவிடவே முடியாது.
அந்தத் தாய்மண் மணக்கும் பாசத்தைக் கடல்கடந்து சேர்க்கும் முயற்சியில், புதுச்சேரி மக்கள் இப்போது படு பிஸியாக இயங்கி வருகிறார்கள். தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், புதுச்சேரி தலைமை தபால் நிலையம் மற்றும் சர்வதேசத் தனியார் கூரியர் நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி என உலகின் பல்வேறு மூலைகளில் வசிக்கும் தங்களது அன்பு உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இனிப்பான நினைவுகளைப் பார்சல்களாகத் தட்டி அனுப்பி வருகிறார்கள் புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள தமிழகப் பகுதி மக்கள்.
அப்படி என்னதான் அந்தப் பார்சல்களில் அனுப்பப்படுகிறது தெரியுமா.. வீட்டில் அம்மா, பாட்டி கைகளால் பாசமும் நெய்யும் கலந்து தட்டப்பட்ட மணக்க மணக்க அதிரசம், மொறுமொறு முறுக்கு, காரசாரமான சீடை... இதோடு கூடவே தையல் மிஷினில் தைக்கப்பட்டு வந்த புத்தாடைகள் மற்றும் பூஜைப் பொருட்கள் எனப் பாசமும் பாரம்பரியமும் அந்தப் பார்சல் பெட்டிகளுக்குள் பத்திரமாகப் பேக் செய்யப்படுகின்றன.
தடை செய்யப்பட்ட நாடுகளைத் தவிர்த்து, உலகெங்கிலும் உள்ள சுமார் 129 நாடுகளுக்குப் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் மூலமாகப் பார்சல்கள் பறக்கின்றன.
எங்க ஊரு தீபாவளி மணத்தை அங்கே இருக்கிற என் பிள்ளைகளுக்கு அனுப்பிட்டேன்... என்கிற மனநிறைவோடு தபால் நிலையத்தை விட்டு வெளியேறும் ஒவ்வொரு பெற்றோர் முகத்திலும், பண்டிகையின் அசல் சந்தோஷம் சுடராய் பிரகாசிக்கிறது..
