/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டில்லி குடியரசு தின விழாவில்... முதல் முறை! புதுச்சேரி அலங்கார ஊர்தி பங்கேற்பு
/
டில்லி குடியரசு தின விழாவில்... முதல் முறை! புதுச்சேரி அலங்கார ஊர்தி பங்கேற்பு
டில்லி குடியரசு தின விழாவில்... முதல் முறை! புதுச்சேரி அலங்கார ஊர்தி பங்கேற்பு
டில்லி குடியரசு தின விழாவில்... முதல் முறை! புதுச்சேரி அலங்கார ஊர்தி பங்கேற்பு
ADDED : ஜன 01, 2026 05:39 AM

புதுச்சேரி: குடியரசு தின விழா அணி வகுப்பில் புதுச்சேரி அரசின் அலங்கார ஊர்தி முதல் முறையாக இடம் பெற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டில்லியில் ஆண்டு தோறும் ஜனவரி 26ம் தேதி நடக்கும் குடியரசு தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும்.
அந்த வகையில் வரும் 26ம் தேதி, டில்லியில் நடக்கும் குடியரசு தின விழா அலங்கார ஊர்தி அணி வகுப்பில் புதுச்சேரி அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய அரசு முதல் முறையாக ஒப்புதல் அளித்துள்ளது.
'புதுச்சேரியின் கைவினை, கலாசாரத்தின் வளமான பாரம்பரியம் மற்றும் ஆரோவில்லின் நோக்கம்' என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த அலங்கார ஊர்தி வடிவமைக்கப்படுகிறது.
இது புதுச்சேரி மாநிலத்தின் செழுமையான கலாசார பாரம்பரியம், பாரம்பரிய கைவினைத் திறன்கள் மற்றும் உலகளவில் போற்றப்படும் ஆன்மிக நகரமான ஆரோவில்லின் கனவை வெளிப்படுத்தும் வகையில் அமையும். அலங்கார ஊர்தியின் முக்கிய சிறப்பம்சங்கள்:
பாரம்பரியக் கலைகள் தலைமுறைகள் தோறும் பாதுகாக்கப்பட்டு வரும் மண்பாண்டங்கள், சுடுமண் சிற்பக்கலை மற்றும் சிற்பக் கலைகளில் புதுச்சேரி கொண்டுள்ள நிலையான பாரம்பரியத்தையும், கைவினைக் கலைஞர்களின் பெருமைகளையும் இது எடுத்துக் காட்டும்.
வாழ்வாதாரமும் வளர்ச்சியும் இவ்வகையான கைவினைப் பொருட்கள் அந்தந்தப் பகுதியின் அடையாளத்தை உருவாக்குவதோடு, வாழ்வாதாரங்கள், கலாசாரத் தொடர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சியை எவ்வாறு ஆதரிக்கின்றன என்பதை இது விளக்கும்.
முன்புறத் தோற்றம் அலங்கார ஊர்தியின் முன்புறத்தில், ஆரோவில்லின் பொன்மயமான மாத்ரிமந்திர், மனித ஒற்றுமை, ஆன்மிக ஈடுபாடு மற்றும் உலக அமைதியின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறது. இது ஆரோவில்லின் உலக நகரக் கனவைக் குறிக்கிறது.
பக்கப்பகுதி இதில் காணப்படும் சுடுமண் யானைச் சிற்பம் மற்றும் கிராமிய கட்டடக்கலைக் கூறுகள், சுடுமண் சிற்பக்கலையில் புதுச்சேரி கொண்டுள்ள ஆழமான பிணைப்பை வெளிப்படுத்துகின்றன. மேலும் பாரம்பரிய வீடுகள், வாழ்வியல் நடைமுறைகள் மற்றும் இயற்கையுடன் இணைந்த உறவுகளைப் பிரதிபலிக்கின்றன.
மையப்பகுதி மண்பானை தயாரித்தல், சிற்ப வடிவமைப்பு மற்றும் சுடுமண் சிற்பக் கைவினைப் பணிகளில் ஈடுபடும் கைவினைக் கலைஞர்கள் இடம்பெற்று, அவர்களின் நுட்பமான திறனை வெளிப்படுத்துவர்.
சமூக விழுமியங்கள் பாரம்பரிய விழாவினை உருவகப்படுத்துவதன் மூலம் கலாசார மதிப்புகள், சமூக ஒற்றுமை மற்றும் குடும்ப மரபுகள் பிரதிபலிக்கப்படும். பாரம்பரிய கைவினைக் கலைகளைப் பாதுகாத்து வளர்த்து வரும் அதே வேளையில், முன்னேற்றத்தை நோக்கிய அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் ஆன்மிக ஊக்கத்துடன் கூடிய புதுச்சேரியின் பயணத்தை இந்த அலங்கார வாகனம் பிரதிபலிக்கிறது.

