கொலை நகரமாகும் புதுச்சேரி இந்திய கம்யூ., குற்றச்சாட்டு
கொலை நகரமாகும் புதுச்சேரி இந்திய கம்யூ., குற்றச்சாட்டு
UPDATED : நவ 10, 2026 07:21 PM
ADDED : நவ 10, 2026 07:17 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கினை நிலை நாட்ட முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூ., வலியுறுத்தி உள்ளது.
இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் அறிக்கை;
புதுச்சேரியில் சமீப காலமாக சர்வ சாதாரணமாக கொலைகள் நடக்கின்றன. ரவுடிகள், திருட்டு, வழிப்பறி, கொலைகள் என பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இளைய வயதில் வேலையின்மை காரணமாக சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
ரெயின்போ நகரில் ஒரே இடத்தில் நடந்த மூன்று கொலைகளுக்குப் பிறகு இரவு நேர ரோந்து பணி தீவிரமாக்கப்படும் என, காவல்துறை தலைமை அதிகாரி அறிவித்தார். அது தொடரவில்லை. காவல்துறையில் மாதந்தோறும் நடைபெறும் சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டங்கள் வெறும் சடங்கு நிகழ்ச்சியாக அமைகிறது.
புதுச்சேரி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். துரிதமாக வழக்கு விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். காவல் துறையில் கிரிமினல் பிரிவில், நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
அரசு வழக்கறிஞர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இரவு ரோந்து பணிகளுக்கு ஆர்வமிக்க காவலர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும். இப்பிரச்னையின் தீவிரத்தை கருதி முதல்வர் உடனடியாக காவல்துறையின் கூட்டத்தைக் கூட்டி சட்டம் ஒழுங்கினை நிலை நாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
