நடைபாதை ஆக்கிரமிப்பு வாகனங்களுக்கு ‘கெடு’: புதுச்சேரி நகராட்சி அதிரடி நடவடிக்கை
நடைபாதை ஆக்கிரமிப்பு வாகனங்களுக்கு ‘கெடு’: புதுச்சேரி நகராட்சி அதிரடி நடவடிக்கை
UPDATED : நவ 14, 2026 07:49 PM
ADDED : நவ 14, 2026 07:45 PM

புதுச்சேரி நகராட்சி எல்லைக்குட்பட்ட சாலைகள் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் களம் இறங்கியுள்ளது.
நகரின் முக்கியச் சாலைகளிலும் நடைபாதைகளிலும் பழுதடைந்த கார்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் தள்ளுவண்டிகள் எனப் பல நாட்களாகக் கைவிடப்பட்ட நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனால், பாதசாரிகள் நடமாட முடியாமல் தவிப்பதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த வாகனங்களைச் சுற்றிக் குப்பைகள் தேங்குவதும், கொசுக்கள் உற்பத்தியாகிச் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதும் பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் புதுச்சேரி நகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நடைபாதைகளை ஆக்கிரமித்து வணிகம் செய்பவர்கள், உணவு விற்பனை வாகனங்கள் மற்றும் பழுதடைந்த மூன்று சக்கர வண்டிகளைச் சாலையில் நிறுத்தியிருப்பவர்கள், அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 15 நாட்களுக்குள் தாங்களாகவே முன்வந்து அவற்றை அகற்றிக்கொள்ள வேண்டும் எனக் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
கெடு முடிந்த பிறகும் அகற்றப்படாத வாகனங்கள் நகராட்சி நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, சட்டப்படி வழக்குகளும் பதிவு செய்யப்படும் எனக் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் புதுச்சேரி நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு கூறுகையில், ‘கடந்த ஜூன் 19-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, பாதுகாப்பான நடைபாதைகளை அமைப்பதும், அவற்றை முறையாகப் பராமரிப்பதும் பொதுமக்களின் அடிப்படை உரிமை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 6ம் தேதி வாகனப் புகை மாசுபாடு தொடர்பான வழக்கில், பயன்பாட்டுக் காலம் முடிந்த பழைய வாகனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையிலேயே, பொதுமக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஏற்கனவே நடைபாதை, சாலையை ஆக்கிரமித்துள்ள வாகனங்கள், தள்ளுவண்டிகள் உள்ளிட்டவைகளை கணக்கெடுத்துள்ளோம். புகைப்படம் எடுத்துள்ளோம்.
எனவே, நடைபாதை ஆக்கிரமிப்பாளர்கள், சாலையோர ஆக்கிரமிப்பு வாகன உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது ஆக்கிரமிப்பு வாகனங்களை அகற்றி கொள்ள வேண்டும்’ என்றார்.
