தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி தே.ஜ., கூட்டணியில் சலசலப்பு : பா.ஜ., பொறுப்பாளர் பேச்சுக்கு பா.ம.க., எதிர்ப்பு....

 புதுச்சேரி தே.ஜ., கூட்டணியில் சலசலப்பு : பா.ஜ., பொறுப்பாளர் பேச்சுக்கு பா.ம.க., எதிர்ப்பு....

 புதுச்சேரி தே.ஜ., கூட்டணியில் சலசலப்பு : பா.ஜ., பொறுப்பாளர் பேச்சுக்கு பா.ம.க., எதிர்ப்பு....


ADDED : மார் 15, 2026 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 04:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பா.ஜ., பேச்சுக்கு, புதுச்சேரி பா.ம.க., எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி உள்ளது.

தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தை போன்று தேசிய ஜனநாயக கூட்டணி புதுச்சேரியிலும் தொடர்கிறது.

ஆனால், புதுச்சேரி கூட்டணியில் உள்ள பா.ம.க., சட்டசபை தேர்தலில் போட்டியிட தொகுதி ஏதும் கேட்கவில்லை என, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா நேற்று முன்தினம் பேட்டியளித்திருந்தார்.

இந்த கருத்து பா.ம.க., நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ., மேலிட பொறுப்பாளர் பேச்சுக்கு புதுச்சேரி பா.ம.க., கடும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

இது குறித்து மாநில அமைப்பாளர் கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் கூறும்போது, 'கடந்த பிப்ரவரி 25ம் தேதி பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ், புதுச்சேரி அமைப்பாளர்களான நான், வடிவேல், மதியழகன் ஆகியோரை அழைத்து பேசினார்.

அப்போது முதல்வர் ரங்கசாமி, பா.ஜ.க., மாநில தலைவர் ராமலிங்கம் ஆகியோரை சந்தித்து புதுச்சேரி கூட்டணி சம்பந்தமாக பேசுவதற்கு தேதி வாங்குங்கள், பேச்சு வார்த்தைக்கு தமிழக பா.ம.க., நிர்வாகிகளை அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்தார்.

அதன்படி நாங்களும், பிப்.26, மார்ச் 7, மற்றும் 13 ஆகிய தேதிகளில் முதல்வர் ரங்கசாமி, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் ஆகியோரை நேரில் சந்தித்து கூட்டணி இடங்கள் குறித்து பேசினோம். ஆனால் அவர்கள் பிடி கொடுக்காமல் இன்று, நாளை என்று இழுத்தடித்து வந்தனர்.

அப்படி இருக்கும்போது திடீரென இப்போது பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, பா.ம.க., தொகுதி எதுவும் கேட்கவில்லை என்று கூறுவது எங்களுக்கு மன வருத்தத்தை அளிக்கிறது.

எங்களை அழைத்து வைத்து பேசினால் தானே நாங்கள் தொகுதி கேட்பது தெரியும். ஆனால் பேசுவதற்கே வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் எப்படி தெரியும். கூட்டணி கட்சிகளின் இந்த செயல்பாடு பா.ம.க., கட்சியினர் இடையே மன வருத்தத்தையும் வேதனையையும் தருவதாக உள்ளது. கூட்டணி இடங்கள் சம்பந்தமாக எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என்றார்.

பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா பேச்சுக்கு பா.ம.க., எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தியுள்ளது, புதுச்சேரி ஜனநாயக கூட்டணியில் புயலை கிளப்பியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us