தேர்தல் பணி ஊதியம் குறைவு ;புதுச்சேரி பி.எல்.ஓ.,க்கள் குமுறல்
தேர்தல் பணி ஊதியம் குறைவு ;புதுச்சேரி பி.எல்.ஓ.,க்கள் குமுறல்
ADDED : ஏப் 18, 2026 08:41 PM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட்ட பி.எல்.ஓ.,க்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் மிகக் குறைவாக உள்ளதாகக் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரியில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை நடந்தன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக (பி.எல்.ஓ.) ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்களை வழங்குவது, பூர்த்தி செய்த படிவங்களைச் சேகரிப்பது எனத் தீவிரமாகப் பணியாற்றினர்.
இந்தச் சிறப்புப் பணிக்காக பி.எல்.ஓ.,க்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது அதிகாரிகளோ பி.எல்.ஓ.,க்களுக்கு ரூ.8 ஆயிரம், தன்னார்வலர்களுக்கு ரூ.4 ஆயிரமும் வழங்கியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வெயில் மற்றும் உடல் ரீதியான இன்னல்களைப் பொருட்படுத்தாமல் பணியாற்றிய தங்களுக்கு, உரிய முழு ஊதியமும் கிடைக்கவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பி.எல்.ஓ.,க்கள் கூறுகையில், தன்னார்வலர்களின் உதவியின்றி நாங்களே முழுமையாகப் பணிகளை மேற்கொண்டோம். ஆனால், ஊதியத்தைப் பிரித்து வழங்கி எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுப்பதிவு நடக்க பி.எல்.ஓ.,க்களின் களப்பணி முக்கியக் காரணம். எனவே, அரசு தலையிட்டு நிர்ணயிக்கப்பட்ட முழுத் தொகையையும் வழங்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது இந்த ஆடியோ வைரலாகி வருவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
