/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷனில்... கூடுதல் வசதிகள்!ரூ.7.17 கோடிக்கு தென்னக ரயில்வே டெண்டர்
/
புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷனில்... கூடுதல் வசதிகள்!ரூ.7.17 கோடிக்கு தென்னக ரயில்வே டெண்டர்
புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷனில்... கூடுதல் வசதிகள்!ரூ.7.17 கோடிக்கு தென்னக ரயில்வே டெண்டர்
புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷனில்... கூடுதல் வசதிகள்!ரூ.7.17 கோடிக்கு தென்னக ரயில்வே டெண்டர்
ADDED : பிப் 10, 2026 04:53 AM

புதுச்சேரி: பயணிகள் எண்ணிக்கையும், ரயில் இயக்கமும் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழ்நிலையில், புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷன் நடைமேடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.இதன் ஒரு பகுதியாக, புதிய பிளாட்பாரம் அமைக்கும் பணிக்காக ரூ.7.17 கோடி மதிப்பிலான டெண்டர் விடப்பட்டுள்ளது. 1879-ம் ஆண்டு கட்டப்பட்ட புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷன் , இந்தியாவின் பழமையான ரயில்வே ஸ்டேஷன்களில் ஒன்றாகும். பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் வர்த்தகமும், ரயில் போக்குவரத்தும் மிகுந்த செழிப்புடன் இருந்த இந்த ஸ்டேஷன், காலப்போக்கில் முக்கியத்துவத்தை ஓரளவு இழந்தது. இருப்பினும், புதுச்சேரி - தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை இணைக்கும் குறைந்த எண்ணிக்கையிலான ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தன.
மற்ற மாநிலங்களில் உள்ள முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் அதிகளவு மூலதன முதலீடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், புதுச்சேரி ரயில் நிலைய மேம்பாட்டுக்கு நீண்ட காலமாக குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. 2014-15ம் ஆண்டில் கூட, மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.5.25 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால், புதுச்சேரி இன்று ஒரு முக்கிய சுற்றுலா நகரமாக உருவெடுத்துள்ள சூழ்நிலையில், தென்னக ரயில்வே தற்போது அதிக மூலதன முதலீடுகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. கடந்த 2023-24ம் ஆண்டில் மட்டும், புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.239.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம், எஸ்கலேட்டர்கள், ரயில்கள் நிற்க ஏற்ற 4 நடைமேடைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கழிப்பறைகள், துருப்பிடிக்காத பெஞ்சுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, ரயில்வே ஸ்டேஷன் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த வளர்ச்சியின் தொடர்ச்சியாக, தற்போது புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷவில் புதியதாக ஒரு பிளாட்பாரம் அமைக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.7.17 கோடி மதிப்பிலான டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமேடை, புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் 5-வது பிளாட்பாரமாக அமைய உள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “முன்னதாக புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷனுக்கு வாரத்திற்கு 60 ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தற்போது அந்த எண்ணிக்கை வாரத்திற்கு 102 ரயில்களாக உயர்ந்துள்ளது. தினசரி சராசரியாக 5,800 பயணிகள் ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகை தருகின்றனர். ரயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கூடுதல் நடைமேடைகள் அவசியமாகியுள்ளது.
ஏற்கனவே 4 நடைமேடைகள் உள்ள நிலையில், புதிதாக 'ஐலேண்ட்' வகை பிளாட்பாரம் அமைக்கப்பட உள்ளது. இந்த வகை நடைமேடை, நடுவில் மேடை அமைந்து அதன் இருபுறங்களிலும் ரயில் பாதைகள் அமைந்திருப்பதே அதன் சிறப்பாகும். இதனால், பயணிகள் ஒரே இடத்தில் நின்றபடியே இரு திசைகளிலும் வரும் ரயில்களில் ஏறவும், இறங்கவும் வசதி ஏற்படும். குறைந்த இடத்தில் அதிக பயணிகள் வசதியை உருவாக்கும் இந்த ஐலேண்ட் பிளாட்பாரம் முறை, பெரிய நகரங்களிலும், அதிக பயணிகள் வருகை தரும் ரயில்வே ஸ்டேஷன்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் மாற்று ரயில்களுக்கு செல்லும் பயணிகள் எளிதாக நகர முடியும். அதே நேரத்தில்,ரயில்வே ஸ்டேஷனின் பரப்பளவையும் திறம்பட பயன்படுத்த முடியும் என்றனர். ரயில்வே பாதுகாப்பு, நேர மேலாண்மை, பயணிகளின் சீரான நகர்வு ஆகியவற்றிலும் ஐலேண்ட் பிளாட்பாரம் முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடதக்கது.
'அ
ந்த இடத்தையும் கேளுங்க'
புதுச்சேரி ரயில் பயணிகள் சங்கம் தலைவர் சாமி கூறும்போது, புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கு பல வருடங்களாக உபயோகத்தில் இல்லாமல் உள்ளது. அந்த இடத்தை மத்திய அரசு புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒதுக்கினால் நடை மேடைகளின் எண்ணிக்கையை இன்னும் அதிகப்படுத்தி வைக்கலாம். நான்கைந்து ரயில்களை நிறுத்தி வைக்கலாம். ரயில்கள் நிறுத்தி வைக்க வசதி இருந்தால் மட்டுமே அதிக ரயில்கள் புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் என்றார்.

