/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் சர்வதேச வணிக உச்சி மாநாடு 22ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது
/
புதுச்சேரியில் சர்வதேச வணிக உச்சி மாநாடு 22ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது
புதுச்சேரியில் சர்வதேச வணிக உச்சி மாநாடு 22ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது
புதுச்சேரியில் சர்வதேச வணிக உச்சி மாநாடு 22ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது
ADDED : ஆக 21, 2025 07:46 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்று நாள் சர்வதேச வணிக உச்சி மாநாடு வரும் 22ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்கின்றது. இதில் 30 நாடுகளைச் சேர்ந்த 600 தொழில்முனைவோர் பங்கேற்க உள்ளனர்.
இந்திய வம்சாவளி புலம்பெயர்ந்த மக்களுக்கான உலகளாவிய அமைப்பானா கோபியோவின் தலைவர் குணசேகரன், பொதுச்செயலர் கணேசன் ஆகியோர் கூறியதாவது:
இந்தியாவில் பிரிட்டீஷ், பிரெஞ்சு காலனித்துவ ஆதிக்கம் இருந்தபோது, இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு கூலியாகவும், வேலைக்காகவும் அழைத்து செல்லப்பட்டனர்.
இப்போது நான்கு தலைமுறைகள் கடந்த நிலையில், அவர்களது வாரிசுகள் தொழிலதிபர்களாக உருவெடுத்துள்ளனர். அவர்களை ஒன்றிணைக்கும் வகையில் கடந்த 1989ம் ஆண்டு நியூயார்க்கில் இந்திய வம்சாவளி மக்களுக்கான உலகளாவிய அமைப்பாக கோபியோ நிறுவப்பட்டது.
இந்த அமைப்பின் சர்வதேச வணிக உச்சி மாநாடு வரும் 22ம் தேதி துவங்கி, 24ம் தேதி வரை பழைய துறைமுகத்தில் உள்ள கண்காட்சி மற்றும் வர்த்தக மையத்தில் மாநாடு நடக்கிறது.
மாநாட்டை முதல்வர் ரங்கசாமி துவங்கி வைக்கிறார்.
இந்த உச்சிமாநாட்டில் 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொள்ள உள்ளனர். மாநாடு, புதிய முதலீடுகளை ஈர்ப்பதையும், பிராந்தியத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
உலகளாவிய வணிகத் தலைவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று விருதுகளை வழங்குகிறார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து வருகிறார்.புதுச்சேரி முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான இடமாக நிலைநிறுத்துவதே உச்சிமாநாட்டின் முக்கிய குறிக்கோளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு அரசாங்க உதவி வழங்குவது குறித்து விவாதங்கள் நடத்தப்பட உள்ளன.
புதுச்சேரி இளைஞர்களுக்கு குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டித் தரும் வகையில், புதிய வேலை வாய்ப்புகளை மாநாடு உருவாக்கும். மாநாட்டில், 200க்கும் மேற்பட்ட சர்வதேச வணிகத் தலைவர்கள் மற்றும் 300 இந்திய தொழில்முனைவோர் பங்கேற்க உள்ளனர். 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், அங்கு வணிகர்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் புதுமைகளை காட்சிப்படுத்த உள்ளனர். 20 மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் குழு தலைவர்களின் விளக்கக்காட்சிகள் இடம் பெற உள்ளது.
குழு அமர்வுகளில் 50க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று பேச உள்ளனர். மருத்துவ சுற்றுலாவுக்கான சாத்தியக்கூறுகளையும் இந்த உச்சிமாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது.
புதுச்சேரி பிராந்தியத்தில் புதிய, மாசு இல்லாத தொழில்களுக்கு ஆதரவு தருவதாக அமைச்சர் நமச்சிவாயம் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

