புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 27ம் தேதி ‘ஸ்பாட் அட்மிஷன்’ அறிவிப்பு
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 27ம் தேதி ‘ஸ்பாட் அட்மிஷன்’ அறிவிப்பு
ADDED : ஆக 20, 2026 04:23 PM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வரும் 27 ம் தேதி ஸ்பாட் அட்மிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகம், 2026-27-ம் கல்வி ஆண்டிற்கான பல்வேறு யு.ஜி., மற்றும் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கையை கியூட் மதிப்பெண் அடிப்படையில் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக, ஸ்பாட் அட்மிஷன் வரும் 27 ம்தேதி நடக்கும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
புதுச்சேரி பல்லைக்கழகம் நேரடிச் சேர்க்கையில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் வரும் 27ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணிக்குள் புதுச்சேரி, காரைக்கால் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தொடர்புடைய பள்ளிகள், துறைகள் அல்லது மையங்களில் நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும்.
மதியம் 12.00 மணிக்கு மேல் வரும் பதிவுகள் மற்றும் ஆன்லைன் வழியிலான விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.மாணவர்கள் தங்களுடைய அனைத்து கல்விச் சான்றுகளின் அசல்கள் மற்றும் சமூகச் சான்றிதழ் ஆகியவற்றை நேரில் சரிபார்ப்பிற்காகக் கொண்டு வர வேண்டும். சேர்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் சேர்க்கைக் கட்டணத்தை உடனடியாக ஆன்லைன் வாயிலாகச் செலுத்த ஆயத்தமாக இருக்க வேண்டும். மேலும், சேர்க்கையானது காலியிடங்களின் நிலவரம் மற்றும் தகுதியின் அடிப்படையில் நிரப்பப்படும்.
முதல் முன்னுரிமை: பல்கலைக்கழகம் ஏற்கனவே வெளியிட்ட ஒட்டுமொத்த பொதுத் தகுதிப் பட்டியலின் அடிப்படையில், இதுவரை வெளியிடப்பட்ட எந்தவொரு தேர்வுப் பட்டியலிலும் இடம் பெறாத மாணவர்களுக்கு வழங்கப்படும். இவர்களுக்கு முதலிடம் அளிப்பதன் மூலம், தகுதி இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இரண்டாம் முன்னுரிமை:
ஏற்கனவே வெளியிடப்பட்ட தோ்வுப் பட்டியல்களில் பெயர் இடம்பெற்றும், குறித்த காலத்திற்குள் சேர்க்கைக் கட்டணத்தைச் செலுத்த இயலாமல் வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர்கள் தங்களின் தகுதியை மீண்டும் நிரூபித்து சேர்க்கை பெற இதில் வாய்ப்பளிக்கப்படுகிறது.
மூன்றாம் முன்னுரிமை: புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு சேர்க்கை கோரி இதுவரை விண்ணப்பிக்காத, ஆனால் கியூட் தேர்வில் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு ஆஜராகி தகுதி பெற்ற மாணவர்களுக்குத் தரப்படும்.
இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூட் மதிப்பெண் வைத்துள்ள மாணவர்களுக்கும், முன்னதாக விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கும் பல்கலைக்கழகத்தில் பயிலும் கனவை நனவாக்க இதுவே இறுதிச் சந்தர்ப்பமாகும். எனவே வாய்ப்பினை மிஸ் பண்ணாம போய் சேர்ந்துடுங்க..
