/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது; 1,000 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்
/
புதுச்சேரியில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது; 1,000 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்
புதுச்சேரியில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது; 1,000 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்
புதுச்சேரியில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது; 1,000 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்
ADDED : ஜன 09, 2024 07:18 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் விடிய விடிய பெய்த மழையால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. 15.13 செ.மீ., மழை பதிவானது.
புதுச்சேரியில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மதியம் வரை 24 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது. நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 12.58 செ.மீ., மழையும், மாலை 5:30 மணி வரை 2.55 செ.மீ., மழையும் பதிவானது.
தொடர் மழையால் நகர பகுதியில் சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். புஸ்சி வீதி, காமராஜர் சாலை, இந்திரா சிக்னல் கடலுார் சாலை, காந்தி வீதி எஸ்.வி. பட்டேல் சாலை சந்திப்புகளில் மழைநீர் தேங்கியது. குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழை நீர் முட்டியளவு தேங்கி நின்றதால், வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் தவித்தனர்.
வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்
ரெயின்போ நகர் மெயின்ரோடு, 4 மற்றும் 5 வது குறுக்கு தெருவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பலர் வீடுகளை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் இரவே வெளியேறினர். பொய்யாகுளம், ஜீவா நகர், சூரிய காந்தி நகர், செல்லான் நகர் பகுதியில் 2 அடி வரை தண்ணீர் தேங்கி நின்றது. இங்கு, உழவர்கரை நகராட்சி சார்பில் மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிராமப்புறங்களான திருக்கனுார், மடுகரை, பாகூர், கிருமாம்பாக்கம், வில்லியனுார் உள்ளிட்ட பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. நேற்று மதியத்திற்க பிறகு தண்ணீர் வடிய துவங்கியது. அதன்பிறகு மக்கள் வெளியே வர துவங்கினர்.
சாலையில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பள்ளி, கல்லுாரிகள் விடுமுறை
மழை காரணமாக நேற்று புதுச்சேரியில் பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதுபோல், புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் நேற்று நடக்க இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேர்வு தேதி மீண்டும் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.
16 ஆயிரம் உணவு பொட்டலம்
மழையால் பாதிக்கப்பட்ட பொய்யா குளம், பூமியான்பேட்டை, பாவாணர் நகர், வாய்க்கால்மேடு, செயின்பால்பேட் உள்ளிட்ட பகுதியில் வருவாய்த்துறை சார்பில் 16 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டது.
கடல் சீற்றம்
தொடர் மழை காரணமாக புதுச்சேரி கடல் நேற்று சீற்றத்துடன் காணப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதை ஏற்று மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. கடலில் ஏற்கனவே மீன்பிடித்தவர்களும் நேற்று முன்தினம் இரவு கரை திரும்பினர். படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்திருந்தனர்.
நெற்பயிர்கள் சேதம்
புதுச்சேரியில் சம்பா சாகுபடிக்காக கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் நடவு செய்யப்பட்டது. பொன்னி, டி.பி.டி., உள்ளிட்ட பல ரகங்களில் நெல் பயிரிடப்பட்டு இருந்தது. செழித்து வளர்ந்திருந்த நெற்பயிர்கள் 2 வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்தது.
இந்நிலையில் நேற்று திடீரென மழை பெய்த மழையால் விவசாய நிலங்களை மழைநீர் சூழ்ந்தது. திருக்கனுார், பாகூர், கரிக்கலாம்பாக்கம், சோரியாங்குப்பம், வம்புபட்டு, சுத்துக்கேணி உள்ளிட்ட பல இடங்களில் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
வயல்வெளியில் நெற்பயிர்கள் சாய்ந்து மழைநீரில் மூழ்கி சேதமடைந்தது. ஓரிரு நாட்களில் மீண்டும் மழை பெய்தால், நெற்பயிர்கள் முழுமையாக பாதிக்கப்படும் எனவும், கொம்யூன் பஞ்சாயத்து வடிகலை துார் வாராததால் மழைநீர் வடியாமல் நிலங்களில் தேங்கி, நெற்பயிர் பாழாகியதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். புதுச்சேரியில் ஒட்டுமொத்தமாக ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நேற்றைய மழையில் சேதமடைந்து உள்ளது.
மண்ணாடிப்பட்டு தொகுதி கைக்கிலப்பட்டு கிராமத்தில் விவசாயிகள் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள், மழைநீர் வெளியேற வழியின்றி விவசாய நிலத்தில் தேங்கி முற்றிலும் மூழ்கி சேதமடைந்தன.
விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில், சீரக சம்பா, பொன்னி, பொன்மணி நெல் சரகங்களும், வாழை, மணிலா பயிரிடப்பட்டது. ஒரு வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி உள்ளது. ஏரி வாய்க்கலை முறையாக பராமரிக்காததாலும், மதகுகள் சீரமைக்காததால் மழைநீர் வெளியேற வழியின்றி விவசாய நிலத்தில் தேங்கி, நெற்பயிர்களை பாதித்துள்ளது. விவசாய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நஷ்டஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.