/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காசநோய் இல்லாத மாநிலமாக புதுச்சேரி திகழும்
/
காசநோய் இல்லாத மாநிலமாக புதுச்சேரி திகழும்
ADDED : நவ 11, 2025 06:41 AM

புதுச்சேரி: கிராமங்களுக்கு சென்று பணியாற்ற டாக்டர்கள், ஊழியர்கள் ஆர்வத்தோடு முன்வர வேண்டும் என முதல்வர் ரங்கசாமி பேசினார்.
மத்திய காசநோய் பிரிவு, புதுச்சேரி மாநில காசநோய் மையம் மற்றும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி சமூக மருத்துவத் துறை சார்பில் 'காசநோய் இல்லா கிராமம்' என்ற தலைப்பில் இரண்டு நாள் தென் மண்டல பயிலரங்கம் அக்கார்டு ஓட்டலில் நேற்று துவங்கியது.
பயிற்சியை தொடங்கி வைத்த முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
இந்தியா, இந்தாண்டிற்குள் காசநோய் இல்லாத நாடாக இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் எண்ணம். அதன்படி, புதுச்சேரியில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மாநிலத்தில் 8 கிராமங்கள் காசநோய் இல்லா கிராமங்களாக திகழ்கின்றது. ஒரு காலத்தில் காச நோய், உயிர்க்கொல்லி நோயாக கருதப்பட்டது.
எனது தலைமையிலான அரசு சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி, மக்களுக்கு நல்ல மருத்துவ வசதியை அளித்து வருகிறது. காசநோயாளிகளுக்கு சத்தான உணவு கொடுக்க ரூ.1,000 கொடுக்கப்படுகிறது. இந்நோயை ஒழிக்க கிராமப்புற மக்களுக்கு ஆலோசனை வழங்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் விரைவில் புதுச்சேரி காசநோய் இல்லாத மாநிலமாக திகழும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு சுகாதாரத்துறை முழுவீச்சில் செயல்பட வேண்டும்.
தொடர்ந்து, சிவராந்தகம், கோர்காடு. குடியிருப்புபாளையம், சோரியாங்குப்பம், அரியூர், பி.எஸ்.பாளையம், பூரணாங்குப்பம் மற்றும் செம்பியம்பாளையம் ஆகிய 8 கிராமங்களுக்கு காசநோய் இல்லா கிராமச் சான்றிதழ் வழங்கினார். மேலும், பயிற்சி மருத்துவர்களுக்கான தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் பயற்சி கையேட்டை வெளியிட்டார்.
விழாவில் மத்திய காசநோய் பிரிவு கூடுதல் ஆணையர் வீனா தவான், சுகாதாரத்துறை செயலர் சவுத்ரி முகமது யாசின், கலெக்டர் குலோத்துங்கன், சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள், மாநில சுகாதார இயக்க திட்ட இயக்குநர் கோவிந்தராஜன், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி இயக்குநர் உதயசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பயிலரங்கில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சதீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த காசநோய் அதிகாரிகள், பஞ்சாயத்ராஜ் உறுப்பினர்கள், மருத்துவ கல்லூரி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

