ADDED : நவ 18, 2026 06:06 PM

புதுச்சேரி: சீனியர் ஆண்களுக்கான டி–20 போட்டி தொடரில் புதுச்சேரி அணி, அசாம் அணியை வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் சீனியர் ஆண்களுக்கான டி–20 போட்டி தொடர் நடந்து வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற புதுச்சேரி அணி ஹாட்ரிக் வெற்றிக்காக இன்று (நவ.,18) அசாம் அணியுடன் சண்டிகர் நகரில் மோதியது.
முதலில் பேட் செய்த புதுச்சேரி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. அணியின் பரமேஸ்வரன் 53 ரன்களும், அமன் கான் 55 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து, ஆடிய அசாம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் புதுச்சேரி அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புதுச்சேரி அணியின் ஆதில் அயூப் 4 ஓவரில் 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். 32 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த அமன் கான் ஆட்டநாயகன் விருதை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றார்.
தொடர்ந்து, 3 போட்டிகளில் வென்று 12 புள்ளிகளுடன் புதுசேரி அணி முன்னணியில் உள்ளது.
