UPDATED : நவ 25, 2026 06:08 PM
ADDED : நவ 25, 2026 06:08 PM
புதுச்சேரி: சுடிதார் விளம்பரத்தை பார்த்து ரூ.1.23 லட்சம் பணத்தை பெண் இழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உருளையன்பேட்டை ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் சேஷாத்ரி மனைவி ஆனந்தி,42. இவர் கடந்த மாதம் 1ம் தேதி பேஸ்புக்கில் சுடிதார் விற்பனை சம்பந்தமாக வந்த விளம்பரத்தை பார்த்து, அந்த லிங்கை கிளிக் செய்தார்.
பின் அவரது மொபைல் வாட்ஸ்ஆப்பிற்கு தொடர்பு வந்தது. அதன் மூலம் சுடிதார் வாங்க அவர் ஆயிரம் ரூபாய் செலுத்தினார். பின் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் மூன்றாயிரம் ரூபாய் மதிப்புள்ள சுடிதாரை ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாகவும், கூடுதலாக இரண்டாயிரம் ரூபாய் தர கேட்டுள்ளார். இதனையடுத்து ஆனந்தி மேலும் இரண்டாயிரம் அனுப்பி உள்ளார்.
தொடர்ந்து ஆனந்தியிடம் அந்த மர்ம கும்பல் பல்வேறு தவணைகளாக 1 லட்சத்து 23 ஆயிரத்து 117 ரூபாய் பெற்றுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆனந்தி இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.
அவர்கள் புகாரை உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தனர். உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
