/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவை ரூ.5,828 கோடி! மத்திய உள்துறை செயலரிடம் முதல்வர் வலியுறுத்தல்
/
புதுச்சேரியின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவை ரூ.5,828 கோடி! மத்திய உள்துறை செயலரிடம் முதல்வர் வலியுறுத்தல்
புதுச்சேரியின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவை ரூ.5,828 கோடி! மத்திய உள்துறை செயலரிடம் முதல்வர் வலியுறுத்தல்
புதுச்சேரியின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவை ரூ.5,828 கோடி! மத்திய உள்துறை செயலரிடம் முதல்வர் வலியுறுத்தல்
ADDED : செப் 24, 2024 06:36 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த ரூ.5,828 கோடி ஒதுக்க வேண்டும் என், மத்திய உள்துறை செயலரிடம் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தினார்.
புதுச்சேரியில், மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்படும் முதன்மை திட்டங்களின் செயல்பாடுகளை, மத்திய உள்துறை செயலர் கோவிந்த்மோகன், கூடுதல் செயலர் அசுதோஷ் அக்னிகோத்ரி ஆகியோர் நேற்று தலைமை செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து சட்டசபைக்கு சென்று, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, மாநிலத்தில் பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்த ரூ.5,828 கோடி நிதி ஒதுக்க வேண்டும், முதல்வர் வலியுறுத்தி மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 5828 கோடி தேவைப்படுகின்றது.
குறிப்பாக ஏர்போர்ட் விரிவாக்கத்துக்கு ரூ.3925 கோடி, சட்டசபை கட்ட ரூ.420 கோடி, சுகாதாரத்துறை உட்கட்டமைப்பு மேம்படுத்த ரூ.500 கோடி, மருத்துவ பல்கலைக் கழகம் அமைக்க ரூ.500 கோடி, தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அமைக்க ரூ. 483 கோடி தேவைப்படுகிறது.
இது தொடர்பாக விரிவான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு ஏற்கனவே சமர்பித்துள்ளோம். இந்த கோரிக்கையின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து ரூ.5,828 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.
அதேபோல், மேலும், தமிழகத்தில் ரேஷன்கடைகள் மூலமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் புதுச்சேரியிலும், சண்டிகாரில் மட்டும் இலவச அரிசிக்கு பதிலாக நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகின்றது. இதனை புதுச்சேரி மக்கள் ஏற்கவில்லை.
எனவே மீண்டும் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூலமாக அத்தியாவசிய பொருட்களை வழங்க அரசும் விரும்புகிறது.இதற்கு மத்திய அரசு ஒப்புதல் தர வேண்டும்.
ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் மத்திய அரசின் உதவியை நம்பியுள்ளது. ஆனால் மத்திய அரசு நிதி உதவியை ஆண்டுதோறும் குறைந்து வருகின்றது.
எனவே ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் நிதியுதவியை 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும். நிதி ஆயோக் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் யூனியன் பிரதேசத்திற்கு ஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்படாததால் நிதி உதவி அதிகரிப்பு முக்கியமானது.
புதுச்சேரி சிவில் சர்வீஸ் விதிகள், 1967-ல் விரிவான திருத்தம் செய்ய வேண்டும். பி.சி.எஸ்., கேடர் பலத்தை 62 பதவிகளில் இருந்து 83 ஆக உயர்த்த இந்த திருத்தம் அவசியம். இதற்கு அனுமதிக்க வேண்டும்.
'குரூப்- சி' மற்றும் 'குரூப்-பி' பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான இரண்டு ஆண்டு வயது தளர்வுக்கான புதுச்சேரியின் முன்மொழிவை செயல்படுத்த பணியாளர் மற்றும் பயிற்சி துறையிடம் நிர்வாகம் அனுமதி கோரியுள்ளது. அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சரிடம் கலந்து பேசி, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.