மின்னணு கழிவுகளை கட்டுப்படுத்த புதுவை நகராட்சி முன்மாதிரி முயற்சி
மின்னணு கழிவுகளை கட்டுப்படுத்த புதுவை நகராட்சி முன்மாதிரி முயற்சி
ADDED : செப் 27, 2026 11:17 PM

புதுச்சேரி: மின்னணு கழிவுகள் பெரும் சவாலாக உருவெடுத்து வரும் நிலையில், புதுச்சேரியில் மின்னணு கழிவுகளை குறைத்து, பயன்பாட்டில் இல்லாத பொருட்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் நோக்கத்தோடு, பழுதுபார்ப்பு மற்றும் மறு பயன்பாட்டு மேளா ஒன்றை, புதுச்சேரி நகராட்சி நேற்று ஏற்பாடு செய்தது.
கம்பன் கலையரங்கில் நடைபெற்ற இந்த முகாமில், 12 சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. பொதுமக்கள், தங்கள் வீடுகளில் பழுதாகி கிடந்த காஸ் அடுப்பு, பிரஷர் குக்கர், அயர்ன் பாக்ஸ், மேஜை விசிறி, கிரைண்டர், மிக்ஸி, ரைஸ் குக்கர், இன்டக் ஷன் ஸ்டவ் போன்ற சாதனங்கள் மற்றும் பழுதான குடைகள், காலணிகள் வரை அனைத்தையும் கொண்டு வந்து சரிசெய்து கொண்டனர்.
இம்முகாமில், பொருட்களுக்கான செய்கூலி முற்றிலும் இலவசம். உதிரி பாகங்கள் புதிதாக மாற்ற வேண்டிய தேவை இருந்தால் மட்டும், அதற்கான கட்டணம் பெறப்பட்டது.
புதுச்சேரி நகராட்சி கமிஷனர் ஸ்ரீஜித் கூறுகையில், ''பழைய பொருட்களுக்கு மறுவாழ்வு அளித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்பட்டது. முகாமில் மொத்தம், 208 பேர் தங்கள் பழைய பொருட்களை பழுது பார்த்து எடுத்து சென்றனர்.
''நகராட்சியின் முதல் முயற்சியிலேயே புதுச்சேரி மக்கள் திரளாக பங்கேற்று பயன்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
''மாதந்தோறும் இதுபோன்ற முகாமை நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். பொருட்களை மறு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம், மின்னணு கழிவுகள் சேர்வதை கணிசமாக குறைக்கலாம்,'' என்றார்.
