ஏனாமில் புலசா மீன் சாதனை ஏலம்: ரூ.27,000-க்கு விற்பனையாகி பரபரப்பு
ஏனாமில் புலசா மீன் சாதனை ஏலம்: ரூ.27,000-க்கு விற்பனையாகி பரபரப்பு
UPDATED : செப் 23, 2026 08:32 PM
ADDED : செப் 23, 2026 08:32 PM

புதுச்சேரி: ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில உணவுப் பிரியர்களால் பெரிதும் விரும்பப்படும் புலசா மீன் ஒன்று, ஏனாம் சந்தையில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய சாதனை விலைக்கு விற்பனையாகியுள்ளது.
கவுதமி கோதாவரி ஆற்றில் மீனவர்களின் வலையில் சிக்கிய இந்த அபூர்வ புலசா மீன், ஏனாம் மீன் ஏல மையத்தில் முதற்கட்டமாக ரூ.26,000-க்கு ஏலம் விடப்பட்டது. கோட்டிபள்ளியைச் சேர்ந்த மல்லாடி சத்யநாராயணா என்ற மீனவர் இந்த மீனை ஏலத்தில் எடுத்தார்.
தொடர்ந்து, அதில் ரூ.1,000 லாபம் வைத்து, மொத்தம் ரூ.27,000-க்கு மற்றொரு நபருக்கு அவர் உடனடியாக விற்பனை செய்தார். இந்த ஆண்டில் ஏனாம் பகுதியில் புலசா மீன் ஒன்றுக்குக் கிடைத்த மிக அதிகபட்ச விலை இதுவேயாகும்.
தற்போது மழைக்காலத்தில் புலசா மீன்களின் வரத்து மிகவும் குறைவாக இருப்பதால், அவற்றுக்கான தேவையும் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் கவுதமி கோதாவரி ஆற்றில் வெறும் 7 புலசா மீன்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
வழக்கமாக இவை ரூ14,000 முதல் ரூ22,000 வரை விற்பனையான நிலையில், தற்போது ரூ.27,000 வரை ஏலம் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.
