ADDED : செப் 23, 2026 08:32 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ரத்த மாற்று சேவைகளின் தற்போதைய நிலை, ரத்த தேவைகள் குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் செயல்படும் ரத்த மையங்களின் நிலை, உரிமம், ரத்த சேகரிப்பு மற்றும் ரத்தக் கூறுகள் பிரித்தெடுக்கும் வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஏனாம் பிராந்தியத்தில் புதிய ரத்த மையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யவும், காரைக்கால், மாகி பிராந்தியங்களில் ரத்தக் கூறுகள் பிரித்தெடுக்கும் வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.
ரத்த சேகரிப்பு நடமாடும் வாகனம், ரத்தக் கூறுகளை எடுத்துச் செல்லும் போக்குவரத்து வாகனத்தை புதுப்பித்தல் அல்லது புதிய வாகனங்களை வாங்க வேண்டும். மாவட்டத்தில் தன்னார்வ ரத்ததான முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து முகாம்களை நடத்த வேண்டும்.
நோயாளிகளுக்கு தேவையான ரத்தம் மற்றும் ரத்த கூறுகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதுடன், ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறைக்கு கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தினார்.
