ADDED : அக் 26, 2026 05:29 PM

பாகூர்: மணப்பட்டு தாங்கள் கரை உடைக்கப்பட்டு, வயலில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் பொது பணி துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பாகூர் பகுதியில் இன்று (அக்.,26) காலை 7 மணி நிலவரப்படி கடந்த 48 மணி நேரத்தில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் உள்ள வயல்வெளி மழைநீர் தேங்கி நெற்பயிர் மூழ்கியது. முக்கிய வடிகால் வாய்க்காலான சித்தேரி வாய்க்கால் முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த தண்ணீர் மணப்பட்டு தாங்கள் வழியாக சென்று முள்ளோடை வாய்க்கால் வழியாக கடலில் கலந்து வருகிறது.
இதனிடையே, மணப்பட்டு தாங்களில் உபரி நீர் வெளியேறும் மதகு பகுதி சீரமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், ஏரியின் மேற்கு பகுதியில் உள்ள வயல்வெளியில் தேங்கிய வெள்ள நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், மணப்பட்டு தாங்கள் கரையை உடைத்து தண்ணீரை விரைவாக வெளியேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மணப்பட்டு தாங்கள் கிழக்கு கரையில் சிறிய அளவில் உடைத்து தண்ணீரை வேகமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழை நீர் வடிந்த பின்னர் தாங்கள் கரையை மறுசீரமைப்பு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
