நவ நரசிம்மர் திருக்கோவிலில் ராஜகோபுரம் பணி துவக்கம்
நவ நரசிம்மர் திருக்கோவிலில் ராஜகோபுரம் பணி துவக்கம்
UPDATED : நவ 24, 2026 06:56 PM
ADDED : நவ 24, 2026 06:56 PM

புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் ஸ்ரீ நவ நரசிம்மர் திருக்கோவிலில், 47.3 அடி உயரத்தில் மூன்று நிலைகளுடன் பிரமாண்டமாக அமையவுள்ள ராஜகோபுரம் அமைப்பதற்கான பூமி பூஜை விமர்சையாக நடந்தது.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர் பகுதியில், ஹயக்ரீவர் சன்னதி அருகே ஸ்ரீ நவ நரசிம்மர் திருக்கோவில் அமைக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் அகோபிலத்தில் எழுந்தருளியுள்ள நவ நரசிம்மர் திருக்கோவிலின் அமைப்பை முன்மாதிரியாக கொண்டு, புதுச்சேரியிலும் நவ நரசிம்மர் மற்றும் பானக நரசிம்மர் சன்னதிகளுடன் இத்திருத்தலம் உருவாக்கப்பட்டு வருகிறது.
முக்கியத் திருப்பணியாக ராஜகோபுரம் அமைப்பதற்கான பூமி பூஜை, நேற்று காலை 11:14 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. விழாவிற்கு தினமலர் புதுச்சேரி பதிப்பு வெளியீட்டாளர் கே. வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டன், பெங்களூருவைச் சேர்ந்த பிரபாகர் சோலா, ஸ்ரீராம் தங்க மாளிகை ரமணிகாந்த், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இணைந்து திருப்பணியை துவக்கி வைத்தனர். முன்னதாக, காலை 8:00 மணி முதல் யாக பூஜைகள், புண்யாகவாசனம், வாஸ்து சாந்தி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடந்தன.
இக்கோவிலில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், விமானம், ராஜகோபுரம் மற்றும் கருங்கல் சபா ஸ்தம்பங்கள் என அனைத்தும் பாரம்பரிய ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 47.3 அடி உயரத்தில் மூன்று நிலைகளுடன் பிரமாண்ட ராஜகோபுரம் அமைக்கப்பட உள்ளது.
மேலும், மூலவர் நரசிம்மருக்குப் பின்புறம் ஸ்ரீராமர், ஆஞ்சநேயர், சுதர்சன ஆழ்வார் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகளும், திருமுன்பாக வேதாந்த தேசிகர் சன்னதியும் அமைக்கப்பட உள்ளன. பக்தர்களின் வசதிக்காக திருக்குளம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.
பக்தர்களின் ஆதரவுடனும், நன்கொடைகள் மூலமாகவும் நடைபெற்று வரும் இத்திருப்பணிகளை அடுத்த ஆண்டிற்குள் நிறைவு செய்து, மகா சம்ப்ரோக் ஷணம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான ஏற்பாடுகளை வேத ஆகம சம்ரக் ஷண லட்சுமி சரஸ் மாருதி டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
