ராஜிவ் – இந்திரா மேம்பாலம் பணிகள் தீவிரம்: சோதனை துாணில் அதிரடி ஆய்வு
ராஜிவ் – இந்திரா மேம்பாலம் பணிகள் தீவிரம்: சோதனை துாணில் அதிரடி ஆய்வு
ADDED : நவ 26, 2026 09:54 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ராஜிவ் சதுக்கம் முதல் இந்திரா சதுக்கம் வரை பிரமாண்ட மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கான முதற்கட்டப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக, மேம்பாலத் துாணின் தாங்குதிறனை உறுதி செய்வதற்கான ‘லோடு டெஸ்ட்’ சோதனைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ரூ.436.18 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், கட்டுமானம் தொடர்பான சிவில் பணிகளுக்கு மட்டும் ரூ.319.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் முதற்கட்டமாக, மேம்பாலத் துாண்கள் அமையவுள்ள பகுதிகளில் மண்ணின் தன்மை மற்றும் துாண்களின் தாங்குதிறனை ஆய்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக, ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள்மருத்துவமனை எதிரில் 30 மீட்டர் ஆழமும், 1.5 மீட்டர் விட்டமும் கொண்ட சோதனைத் துாண் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்தச் சோதனைத் துாண் எவ்வளவு எடையைத் தாங்கும் திறன் கொண்டது என்பதை உறுதி செய்வதற்கான ‘லோடு டெஸ்ட்’ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்காக, ராஜஸ்தான் மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர் குழுவினர் புதுச்சேரிக்கு வருகை தந்து சோதனைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நவீன ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ‘பை-டைரக் ஷனல் லோடு டெஸ்ட்’ எனப்படும் இருதிசை எடைத் தாங்குதிறன் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் சோதனைத் துாண் எவ்வளவு சுமையைத் தாங்கும் திறன் கொண்டது என்பது துல்லியமாகக் கணக்கிடப்பட உள்ளது.
3.877 கி.மீ.: கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரால் இத்திட்டத்திற்கு பூமி பூஜை போடப்பட்டு, பணிகள் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டன.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் முழு அனுமதியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், பிரதான மேம்பாலம் மற்றும் அதன் பல்வேறு இணைப்புப் பால்களைச் சேர்த்து மொத்தம் 3.877 கி.மீ., துாரத்திற்கு பிரமாண்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் முக்கியப் பகுதியாக, இந்திரா காந்தி சதுக்கத்திலிருந்து ராஜிவ் காந்தி சதுக்கம் வரை 1,100 மீட்டர் துாரத்திற்கு பிரதான மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர, பல்வேறு வழித்தடங்களை இணைக்கும் வகையில் இணைப்புப் பாலங்களும் அமைக்கப்பட உள்ளன.
கடலுார் வழித்தடம்: ஹோட்டல் காமாட்சியிலிருந்து இந்திரா காந்தி சதுக்கம் வரை 420 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
கிழக்குக் கடற்கரைச் சாலை வழித்தடம்: ராஜிவ் காந்தி சதுக்கத்திலிருந்து என்.எஸ். பெட்ரோல் பங்க் வரை 680 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட உள்ளது.
விழுப்புரம் மார்க்கம்: இந்திரா காந்தி சதுக்கத்திலிருந்து விக்டோரியா நகர் சந்திப்பு வரை 300 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமையவுள்ளது.
புதுபஸ்டாண்ட்: இந்திரா சதுக்கத்திலிருந்து புது பஸ்டாண்ட் நிலையம் வரை 853 மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
கோரிமேடு வழித்தடம்: ராஜிவ் சதுக்கத்திலிருந்து தட்டாஞ்சாவடி சந்திப்பு வரை 524 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேம்பாலம் மற்றும் இணைப்புப் பாலங்கள் என மொத்தம் 3.877 கிலோமீட்டர் துாரத்திற்கு மேம்பால முதற்கட்ட ஆய்வுப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், சோதனைத் துாணின் தாங்குதிறன் முடிவுகள் இத்திட்டத்தின் அடுத்தகட்ட கட்டுமானப் பணிகளுக்கு முக்கிய அடித்தளமாக அமையவுள்ளன.
