/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது சேவை கட்டணத்தை உயர்த்த பரிந்துரை: ஐ.டி., துறையின் கையில் முடிவு
/
பொது சேவை கட்டணத்தை உயர்த்த பரிந்துரை: ஐ.டி., துறையின் கையில் முடிவு
பொது சேவை கட்டணத்தை உயர்த்த பரிந்துரை: ஐ.டி., துறையின் கையில் முடிவு
பொது சேவை கட்டணத்தை உயர்த்த பரிந்துரை: ஐ.டி., துறையின் கையில் முடிவு
ADDED : மார் 17, 2025 02:33 AM

புதுச்சேரி: பொது சேவை மையங்களின் வழங்கப்படும் சேவை கட்டணத்தை காலத்துகேற்ப மாற்றியமைக்க வேண்டும் என, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே அனைத்து சேவைகளையும் வழங்க புதுச்சேரி மாநிலத்தில் 307 பொது சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது 77 அரசு துறை சேவைகள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பட்டா, புலம்பட நகல், வில்லங்கம், பிறப்பு, இறப்பு உள்ளிட்ட ஐந்து சேவைகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.
இதனால் பொதுமக்கள் மீண்டும் அரசு துறைகளை நாடி செல்வதால், பல்வேறு அரசு துறைகளில் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்கள் அலைச்சல் இல்லாமல் அரசு சேவைகளை பெற பொது சேவை மையங்களில் வழங்கப்படும் சேவைகளை 172 ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, இதில் 55 அரசு துறை சேவைகள் பொது சேவை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சேவைகள் அதிகரிக்கப்பட நிலையில், அரசு துறைக்கான சேவை கட்டணத்தையும் உயர்த்த வேண்டும் என, பொது சேவை மைய உரிமையாளர்கள் தற்போது போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இது தொடர்பாக கலெக்டரை சந்தித்தும் வலியுறுத்தினர்.
அதை தொடர்ந்து பொது சேவை மையங்களின் கட்டணத்தை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம், ஐ.டி., துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. ஐ.டி., துறையும் அரசின் கிரீன் சிக்னலுக்காக காத்திருக்கிறது.
போர்க்கொடி ஏன்
புதுச்சேரியில் பொது சேவை மையம் வாயிலாக பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க தற்போது 11 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கிராமப்புற தொழில் முனைவரான பொது சேவை மைய உரிமையாளர்களுக்கு 3 ரூபாய் கிடைக்கும்.
6 ரூபாய் சான்றிதழ் விநியோகிக்கும் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துக்கு செல்லுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மின் ஆளுமை சங்கத்திற்கு ஒரு ரூபாய், மாவட்ட மின் ஆளுமை சங்கத்திற்கு ஒரு ரூபாய் செல்கிறது.
இதேபோல் பட்டா, செட்டில்மென்ட் காப்பி வழங்க பொது சேவைகளுக்கு 40 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பட்டா, செட்டில்மென்ட் கொடுக்கும் நில அளவை துறைக்கு 20 ரூபாய் செல்லும்போது, பொது சேவை உரிமையாளர்களுக்கு 8 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. மேலும், புதுச்சேரி மாநில மின் ஆளுமை சங்கத்திற்கு 6 ரூபாய், மாவட்ட மின் ஆளுமை சங்கத்திற்கு 4 ரூபாய் செல்கிறது.
இதேபோல் புலம்பட நகல் (எப்.எம்.பி.,) பெற 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் பொது சேவை மையங்களுக்கு 8 ரூபாய் மட்டுமே பங்கு செல்கிறது. நில அளவை துறைக்கு 25 ரூபாய், மாநில மின் ஆளுமை சங்கத்திற்கு 10 ரூபாய், மாவட்ட மின் ஆளுமை சங்கத்திற்கு 5 ரூபாய் பங்கு செல்கிறது.
புதுச்சேரியில் குறைந்தபட்சம் ஒரு ரூபாயில் இருந்து அதிகப்பட்சம் 8 ரூபாய் மட்டுமே பொது சேவை மையங்களுக்கு பங்கு கிடைக்கிறது.
அதே வேளையில் தமிழகத்தில் குறைந்தபட்சமாக சான்றிதழ் சேவை கட்டணமாக 60 ரூபாய், பொது சேவை மையங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதில் 48 ரூபாய் பொது சேவை மையங்களுக்கு பங்கு செல்கிறது. இதன் காரணமாகவே புதுச்சேரியில் உள்ள பொது சேவை மையங்கள் தமிழகத்தை சுட்டிகாட்டி, சான்றிதழ் சேவைக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என, போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
மாவட்ட நிர்வாகமும், கோரிக்கைக்கு செவிசாய்த்து, ஐ.டி., துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.