/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தகராறில் படுகாயமடைந்த வாலிபர் சாவு மதுக்கடையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
/
தகராறில் படுகாயமடைந்த வாலிபர் சாவு மதுக்கடையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
தகராறில் படுகாயமடைந்த வாலிபர் சாவு மதுக்கடையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
தகராறில் படுகாயமடைந்த வாலிபர் சாவு மதுக்கடையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
ADDED : ஜன 11, 2025 06:44 AM

பாகூர்: குருவிநத்தம் தனியார் மதுபான கடையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உறவினர்கள் மதுக் கடையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் அடுத்த வெள்ளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து 34: கூலி தொழிலாளி. இவருக்கு, விகிதா 23; என்ற மனைவியும் 7 மாதமான யாஷ்வின் என்ற மகனும் உள்ளனர்.
முத்து கடந்த 8ம் தேதி மாலை பாகூர் அடுத்த குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டு பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் நண்பர்களுடன் மது அருந்தினார்.
அவருக்கும், அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மற்றொரு கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த கும்பல் முத்து மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றது.
படுகாயம் அடைந்த முத்து ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி புகாரின் பேரில், பாகூர் போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இரண்டாயிரவிளாகம் கிராமத்தை சேர்ந்த ஆனந்த ராஜ் 24; குருவி நத்தம் ராஜேஷ், 34; ரஞ்சித், 26, ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், முத்து நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து, வெள்ளப்பாக்கத்தை சேர்ந்த முத்துவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10:00 மணியளவில், குருவிநத்தம் சித்தேரி பகுதியில் உள்ள தனியார் மதுபான கடையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன், பாகூர் இன்ஸ்பெக்டர் (பொ) கலைச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர்கள் 'எல்லையில் பகுதியில் உள்ள மதுபான கடைக்கு மது குடிக்க வரும் தமிழக இளைஞர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
முத்து அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிட வேண்டும்.
சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், தடுக்க தவறியவர்கள் மீதும் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திட வேண்டும் என வலியுறுத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இப்போராட்டத்தால், இரண்டாயிரவிளாகம் - குருவிநத்தம் சாலையில் சுமார் 3:00 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.