'நீட்' மருத்துவ படிப்புகளுக்கான இட ஒதுக்கீடு வெளியீடு:அரசு மருத்துவ கல்லுாரியில் 131 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள்
'நீட்' மருத்துவ படிப்புகளுக்கான இட ஒதுக்கீடு வெளியீடு:அரசு மருத்துவ கல்லுாரியில் 131 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள்
UPDATED : ஆக 16, 2026 06:10 PM
ADDED : ஆக 16, 2026 06:00 PM

புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில், இட ஒதுக்கீட்டு விபரங்களை சென்டாக் வெளியிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு மொத்தம் 6,023 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் சமர்ப்பித்த சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. நீட் படிப்புகளில் உள்ள மொத்த இடங்கள், இடஒதுக்கீட்டு விபரங்களை சென்டாக் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லுாரி:: இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள மொத்தம் 180 எம்.பி.பி.எஸ்., இடங்களில், 131 இடங்கள் புதுச்சேரி மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 27 இடங்களும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டிற்கு 22 இடங்களும் வழங்கப்பட்டுள்ளன. மாநில ஒதுக்கீட்டுக்கான 131 இடங்களில், புதுச்சேரி பிராந்தியத்திற்கு 98 இடங்களும், காரைக்காலுக்கு 24 இடங்களும், மாகேவிற்கு 5 இடங்களும் மற்றும் ஏனாம் பிராந்தியத்திற்கு 4 இடங்களும் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
இட ஒதுக்கீட்டு ரீதியாக பார்க்கும்போது பொது- 53, இ.டபுள்யூ.எஸ்.,-13, ஓ.பி.சி.,-15, எம்.பி.சி.,-23, எஸ்.சி.,-21, இ.பி.சி.,-3, பி.சி.எம்., -2, எஸ்.டி.,-1 அடிப்படையில் நிரப்பப்படுகிறது. உள்ஒதுக்கீடாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 13, மாற்றுத்திறனாளிகள்-6, விடுதலை போராட்ட வீரர் வாரிசு-5, முன்னாள் ராணுவ வீரர் வாரிசு-1, விளையாட்டு வீரர்-1 சீட்கள் கிடைக்கும்.
தனியார் மருத்துவ கல்லுாரிகள்:: பிம்ஸ், மணக்குள விநாயகர் மற்றும் வெங்கடேஸ்வரா ஆகிய மூன்று கல்லுாரிகளிலும் தலா 250 இடங்கள் வீதம் மொத்தம் 750 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில் நீதிமன்ற உத்தரவுகளின்படி, பிம்ஸ் கல்லுாரியில் 108 இடங்களும், மணக்குள விநாயகர் கல்லுாரியில் 95 இடங்களும், வெங்கடேஸ்வரா கல்லுாரியில் 95 இடங்களும் என, மொத்தம் 298 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிற்குப் பெறப்பட்டுள்ளன.
இட ஒதுக்கீட்டு ரீதியாக பார்க்கையில் பொது-149, ஓ.பி.சி.,-33, எம்.பி.சி.,-54, எஸ்.சி.,-47, இ.பி.சி., -6, பி.சி.எம்.,-6, எஸ்.டி.,-2, பி.டி.,-1 சீட்டுகள் கிடைக்கும். உள் ஒதுக்கீடாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 30, மாற்றுத்திறனாளி-15, விடுதலை போராட்ட வீரர் வாரிசு-12, முன்னாள் ராணுவ வீரர்-3, விளையாட்டு வீரர்-3 சீட்டுகள் கிடைக்கும்.
பல் மருத்துவம்:: அரசு பல் மருத்துவக் கல்லுாரியான மகாத்மா காந்தி கல்லுாரியில் உள்ள 125 இடங்களில் அரசு ஒதுக்கீடாக 51 இடங்கள், சுயநிதி ஒதுக்கீடாக 50 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீடாக 19 இடங்கள், என்.ஆர்.ஐ., ஒதுக்கீடாக 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் பல் மருத்துவக் கல்லுாரிகளான மாகே இன்ஸ்டிடியூட் மற்றும் வெங்கடேஸ்வரா கல்லுாரிகளில் உள்ள தலா 100 இடங்களில், கல்லுாரிக்கு 35 இடங்கள் வீதம் மொத்தம் 70 பி.டி.எஸ்., இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன.
ஆயுர்வேத மருத்துவம்:: மாகேவில் உள்ள ராஜிவ் காந்தி ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரியில் மொத்தம் உள்ள 63 இடங்களில், மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு 44 இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 9 இடங்களும், என்.ஆர்.ஐ.,ஒதுக்கீட்டிற்கு 9 இடங்களும், மலேசிய அரசு ஒதுக்கீட்டிற்கு 1 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது என, சென்டாக் அறிவித்து கவுன்சிலிங்கிற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது.
