எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கு வரைவு 'மெரிட்'லிஸ்ட் வெளியீடு: 6023 மாணவர்கள் தரவரிசையில் இடம் பிடிப்பு
எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கு வரைவு 'மெரிட்'லிஸ்ட் வெளியீடு: 6023 மாணவர்கள் தரவரிசையில் இடம் பிடிப்பு
UPDATED : ஆக 17, 2026 11:34 PM
ADDED : ஆக 17, 2026 11:14 PM

புதுச்சேரி: மருத்துவப் படிப்புகளுக்கான வரைவு தரவரிசைப் பட்டியலை சென்டாக் வெளியிட்டு, ஆட்சேபனையை வரவேற்றுள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ். மற்றும் பி.வி.எஸ்.சி., உள்ளிட்ட நீட் மதிப்பெண் மருத்துவ படிப்புகளுக்கு அரசு, நிர்வாகம், சிறுபான்மையினர் மற்றும் என்.ஆர்.ஐ ஒதுக்கீடுகளின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான மருத்துவச் சேர்க்கைக்கு மொத்தம் 6,023 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அரசு ஒதுக்கீட்டிற்கு 1,745 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 4,754 பேரும், என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டிற்கு 414 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
சிறப்புப் பிரிவினர் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், தியாகிகளின் வாரிசுகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பிரிவு தரவரிசைப் பட்டியலும் தனியாக வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது விண்ணப்ப சரிபார்ப்பு நிலையினை சென்டாக் இணையதளத்தில் தங்களது டேஷ்போர்டு மூலம் அறிந்துகொள்ளலாம்.
வரைவு தரவரிசை பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தாலோ அல்லது விடுபட்ட சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டியிருந்தாலோ, மாணவர்கள் நாளை, 19ம் தேதி மாலை 5:00 மணிக்குள் தங்களது லாக்-இன் கணக்கில் உள்ள ஆட்சேபனை பகுதி வழியாக சமர்ப்பிக்க வேண்டும்.
புதுப்பிப்பு சான்றிதழ் வருவாய்த்துறை சான்றிதழ்களை புதுப்பித்து சமர்ப்பிக்காததால் நிராகரிக்கப்பட்ட மாணவர்களும் நாளை 19, மாலை 5:00 மணிக்குள் உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, திருத்தப்பட்ட வரைவு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடப்பிரிவு முன்னுரிமை மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கணினி கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களின் பாடப்பிரிவு முன்னுரிமைகளைப் புதுப்பிக்க வேண்டும்.
பாடப்பிரிவு முன்னுரிமைகளைக் குறிப்பிடாத விண்ணப்பதாரர்களுக்கு இட ஒதுக்கீடு பரிசீலிக்கப்படாது என சென்டாக் எச்சரித்துள்ளது.
இரட்டை விண்ணப்பம் மருத்துவ படிப்புகளுக்கு இரட்டை விண்ணப்பம் போட வேண்டாம் என ஏற்கனவே சென்டாக் எச்சரித்து இருந்தது. ஆனால் சிலர் இரட்டை விண்ணப்பம் சமர்பித்துள்ளனர். இந்த இரட்டை விண்ணப்பங்கள் அளித்தவர்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஓவ்வொரு ஆண்டு போலி சான்றிழ்கள் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்தாண்டு போலியான தகவல்கள் அல்லது சான்றிதழ்கள் சமர்ப்பித்தது தெரியவந்தால், மாணவர் சேர்க்கை உடனடியாக ரத்து செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரைவு மெரிட் லிஸ்ட் குறித்த விவரங்கள் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளன. கூடுதல் தகவல்களுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளத்தையோ அல்லது 0413-2655570 என்ற உதவி எண்ணையோ தொடர்புகொள்ளலாம் என சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.
