/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏர்போர்ட் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
ஏர்போர்ட் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : பிப் 05, 2025 05:59 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை, ஏர்போர்ட் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
புதுச்சேரியில் சாலை ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆக்ரமிப்புகளை அகற்றுவதில் ரவுடிகள், ஆட்சியாளர்களின் தலையீடு காரணமாக அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி, பொதுப்பணித்துறை மற்றும் போலீசாருடன் இணைந்து அவ்வப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும், அடுத்த ஓரிரு தினங்களில் அதே இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் முளைத்து விடுகின்றன.
இந்நிலையில் எஸ்.வி., பட்டேல் சாலையில் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது. நேற்று, 2வது நாளாக லாஸ்பேட்டை, ஏர்போர்ட் சாலையில் இ.சி.ஆர்., சந்திப்பு துவங்கி நாவலர் நெடுங்செழியன் பள்ளி வரை, சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
முன்னதாக சாலையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டு, பேனர்களை வியாபாரிகள் அகற்றி கடைக்குள் கொண்டு சென்றனர். இந்த நிலையில், ஆக்கிரமிப்பு படிக்கட்டுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர். போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அந்த இடத்தில் மீண்டும் கடைகள் முளைக்காதவாறு துறை அதிகாரிகள், ஆக்ரமிப்பாளர்கள் மீது போலீசில் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

