ADDED : மார் 01, 2024 02:57 AM

திருக்கனுார்: சந்தை புதுக்குப்பத்தில் சாலையின் நடுவே இருந்த மின் கம்பங்கள், தினமலர் செய்தி எதிரொலியால் நேற்று மாற்றியமைக்கப்பட்டது.
புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு தொகுதி சந்தை புதுக்குப்பம் மெயின் ரோட்டில், பொதுப்பணித்துறை மூலம் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய சாலை அகலப்படுத்தும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.
இதற்காக, சாலை அகலப்படுத்தப்பட்டு 'ப' வடிவ கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.
மின்கம்பங்களை அகற்றாமல், பொதுப்பணித்துறை மூலம் சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. சாலை நடுவே இருந்த மின்கம்பங்கள் மாற்றியமைக்கப் படாததால், அவ்வழியாக செல்லும் வாகன ஓடிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளதாக தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக, காட்டேரிக்குப்பம் மின்துறை ஊழியர்கள், சந்தை புதுக்குப்பம் மெயின்ரோட்டில் சாலையின் நடுவே இருந்த சிமென்ட் மின்கம்பங்களை நேற்று, சாலையோரம் மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

