தமிழக சிறப்பு 'டெட்' தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை
தமிழக சிறப்பு 'டெட்' தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை
ADDED : ஏப் 04, 2026 09:37 PM
புதுச்சேரி: தமிழக சிறப்பு டெட் தேர்வு எழுத புதுச்சேரி ஆசிரியர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென புதுச்சேரி தேசிய ஆசிரியர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களை கொண்டுள்ளது. புதுச்சேரி ஆசிரியர்கள், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலத்தை பயன்படுத்தி டெட் தேர்வை எழுதி வருகின்றனர். அதன்படி, தமிழக அரசு சிறப்பு டெட் தேர்வுக்கு ஏப்., 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த பிப்., மாதம் தமிழக கல்வித்துறை அமைச்சரை, புதுச்சேரி மாநில தேசிய ஆசிரியர் சங்கத்தினர் நேரில் சந்தித்து சிறப்பு டெட் தேர்வு எழுத புதுச்சேரி ஆசிரியர்களை அனுமதிக்க வேண்டுமென கடிதம் அளித்தனர். அதற்கு, புதுச்சேரி கல்வித்துறை அனுமதி கேட்டால் பரிசீலிப்பதாகக் கூறினார்.
தொடர்ந்து, புதுச்சேரி கல்வித்துறை செயலர், தமிழக டெட் தேர்வில் புதுச்சேரி ஆசிரியர்களை தேர்வு எழுத அனுமதிக்கும்படி தமிழக ஆசிரியர் தேர்வாணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதன்படி, புதுச்சேரி மாநில தேசிய ஆசிரியர் சங்கத் தலைவர் பாட்சா, பொதுச் செயலாளர் தீபக், ஆசிரியர் ராஜசேகர் ஆகியோர் தமிழக ஆசிரியர் தேர்வாணைய செயலரை சந்தித்து, புதுச்சேரி ஆசிரியர்களும் தமிழக சிறப்பு டெட் தேர்வில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
அதற்கு செயலர் கலந்து ஆலோசித்து புதுச்சேரி ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் முடிவு எடுப்பதாக உறுதி அளித்தார். அவர் அனுமதி அளித்தால், புதுச்சேரியில் பணிபுரியும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 5,000 ஆசிரியர்கள் பயன் பெறுவர்.
