/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லெனின் சிலை நிறுவ அரசுக்கு கோரிக்கை
/
லெனின் சிலை நிறுவ அரசுக்கு கோரிக்கை
ADDED : ஜன 03, 2026 04:44 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் லெனின் சிலையை நிறுவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
உலகம் போற்றும் உழைப்பாளர் தலைவர் லெனின் முழு உருவச் சிலையை நிறுவுவதில் ஏற்பட்டுள்ள பிரச்னை துரதிருஷ்ட வசமானது. உண்மையில் அரசே முன்வந்து இச்சிலையை நிறுவி திறந்து வைத்திருக்க வேண்டும்.
மகளிர் சமத்துவச் சட்டம், தொழிலாளருக்கு எட்டு மணி நேர வேலை, திட்டமிட்ட வளர்ச்சிக்கான குழு ஆகியவற்றை செயல்படுத்தியவர் லெனின். அப்படிப்பட்டவரின் சிலையை நிறுவுவது புதுச்சேரிக்கு பெருமை தரக்கூடிய விஷயம்.
கம்யூ., கட்சி அதன் பிரதானத் தலைவர் லெனின் முழு உருவச்சிலையை ஏற்கனவே திறக்க திட்டமிட்டு இருந்தது. இதனை அரசு பாதுகாப்பு அளித்து நிகழ்ச்சியை நடத்த உதவி இருக்க வேண்டும்.
மணிமேகலைப் பள்ளியை நிறுவ நிலம் கொடுத்த கோவிந்தராஜ் நாயக்கர் பள்ளியின் ஒரு பகுதியில் லெனின் படிப்பகம் அமைக்க தேவையான நிலத்தையும் கொடுத்திருக்கிறார்.
அங்கே தான் 40 ஆண்டுகளாக யாருடைய தலையீடும் இன்றி லெனின் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. ஒரு வேளை சிலை வைக்கும் இடம் பொது இடமாகவோ அல்லது அரசுக்கு சொந்தமான இடமாகவோ இருந்தாலும் அரசு அந்த இடத்திற்கான அங்கீகாரத்தைக் கொடுத்து, லெனின் சிலையை நிறுவ உதவ வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

