புதுச்சேரி மாநிலத்தில் 243 இந்து கோவில்கள் உள்ளன. இக்கோவில்களை, இந்து அறநிலைய துறை, அறங்காவலர் குழுக்கள், சிறப்பு அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகளை நியமித்து மேற்பார்வை செய்து வருகிறது.
இந்த கோவில்களில் நிதி வசதியற்று ஒரு கால பூஜை கூட செய்திட இயலாத திருக்கோயில்களுக்கு ஒரு கால பூஜை செய்திட உதவும் வகையில் சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டது.
இச்சிறப்புமிகு திட்டத்தின் கீழ் ஒரு கால பூஜை கூட செய்திட இயலாத கோவில்களுக்கு ஆண்டிற்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
தவிர மின் கட்டணத்திற்காக 1,000 ரூபாய், குடிநீர் கட்டணமாக 500 ரூபாய் ஆண்டிற்கு வழங்கப்படுகின்றது. மேலும், பத்து ஆண்டிற்கு ஒரு முறை கோவில் குளம், கிணறுகளை துார்வார 5,000 ரூபாயும் நிதியுதவியாக வழங்கப்படுகிறது.
ஒரு கால பூஜை கூட செய்திட இயலாத கோவில்களுக்கு தற்போது வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபாய் தொகையை உயர்த்த வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. சட்டசபையிலும் எம்.எல்.ஏ.,க்கள் கட்சி பாகுபாடின்றி வலியுறுத்தினர்.சிறு கோவில்களுக்கு ஒரு கால பூஜை தொகை உயர்த்தி வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.
முதல்வரின் அறிவிப்பிற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், இந்து அறநிலையத் துறை கவர்னருக்கு கோப்பு அனுப்பட்டது. இதற்கு கவர்னர் கைலாஷ்நாதன் தற்போது ஒப்புதல் தந்துள்ளார். அதன்படி சிறு கோவில் ஒரு கால பூஜைக்கு இனி 30,000 ரூபாய் கிடைக்க உள்ளது.