ADDED : அக் 22, 2024 05:53 AM

பாகூர்: பாகூர் - பிள்ளையார்குப்பம் சாலையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா கூட்டணி கட்சியினர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே புறவழிச்சாலை அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த சாலையால், கிராமங்களை இணைக்கும் சாலைகளில் போக்குவரத்து தடைபட்டு வருகிறது. குறிப்பாக, பாகூரில் இருந்து பின்னாட்சிக்குப்பம், சார்காசிமேடு வழியாக பிள்ளையார்குப்பம் செல்லும் சாலையின் குறுக்கே புறவழிச்சாலை குறுக்கிடுவதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. இந்த இணைப்பு சாலையை மூட நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், இந்தியா கூட்டணி கட்சியினர், நேற்று காலை விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை பின்னாட்சிக்குப்பம் சந்திப்பு பகுதியில், சாலை கட்டுமான பணியில் ஈடுபட்ட லாரிகளை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன், பாகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த பாகூர் - பிள்ளையார்குப்பம் சாலையை மூட கூடாது, டவுண்டான, அல்லது மேம்பாலம் அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.
''தாசில்தார் கோபாலகிருஷ்ணன் '' கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து, மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போரட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.