/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கர்ப்பிணியிடம் நகை பறிப்பு காரைக்காலில் துணிகரம்
/
கர்ப்பிணியிடம் நகை பறிப்பு காரைக்காலில் துணிகரம்
ADDED : ஜூலை 14, 2025 03:53 AM
காரைக்கால் : காரைக்காலில் தனியாக இருந்த கர்ப்பிணியை மிரட்டி, மூன்று சவரன் நகையை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்கால், கோட்டுச்சேரி, வரிச்சிக்குடி, வள்ளியம்மை நகரை சேர்ந்தவர் வீரமணிகண்டன்; பி.ஆர்.டி.சி., பணிமனை மெக்கானிக். இவரது மனைவி சுவேதா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுவேதா தற்போது மூன்று மாத கர்ப்பமாக உள்ளார்.
நேற்று முன்தினம் சுவேதா மகனுடன் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத் தக்க நபர், குடிக்க தண்ணீர் கேட்டார். சுவேதா தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.
சுவேதா தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர், அவரை மிரட்டி கழுத்தில் உள்ள தங்க செயினை பறிக்க முயன்றார். இதை தடுக்க முயன்றபோது அவரை சுவற்றில் மோதினார். பின், செயினை விடாமல் சுவேதா பிடித்துக் கொண்டார். மர்ம நபர் கையில் வைத்திருந்த இரும்பு ராடை காட்டி செயினை கொடுக்கவில்லை என்றால் குழந்தையை கொன்று விடுவேன் என, மிரட்டினார். பின், சுவேதா கழுத்தில் இருந்த மூன்று சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். அதன் மதிப்பு ரூ.1லட்சம்.
புகாரின் பேரில், கோட்டுச்சேரி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.