பட்டப்பகலில் ரவுடி வெட்டி கொலை புதுச்சேரியில் பயங்கரம்
பட்டப்பகலில் ரவுடி வெட்டி கொலை புதுச்சேரியில் பயங்கரம்
ADDED : செப் 18, 2026 07:13 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பட்டப்பகலில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, கருவடிக்குப்பம் கோமாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (எ) முண்டகண்ணு ஆனந்த்,33; ரவுடியான இவர் மீது, பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
கடந்தாண்டு நடந்த கொலை வழக்கில் சிறை சென்ற ஆனந்த், சில மாதங்களுக்கு முன், ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், நேற்று காலை நண்பர்களை பார்ப்பதாக கூறி, வெளிய சென்றார். பின், மதியம் 1.50; மணியளவில் இ.சி.ஆரில்., ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து நான்கு பைக்குகளில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், ஆனந்தின் ஸ்கூட்டர் மீது மோதியது. நிலைதடுமாறி கீழே விழுந்த ஆனந்தை அவர்கள் சுற்றிவளைத்து, கை, முகம் உள்ளிட்ட இடங்களில் சராமரியாக வெட்டியது. முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தி சரிந்த அவர் சம்பவ இடத்தில் இறந்தார்.
கொலை நடந்த இடத்தில், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, அது சிறிது துாரம் ஓடி நின்றது. மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிப்பட்டன. சம்பவ இடத்தில், சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன், எஸ்.பி., வம்சிதரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து அங்குள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிப் பதிவுகள் அடிப்படையில், விசாரித்து வருகின்றனர். மேலும் கொலையாளிகள் பயன்படுத்திய பைக் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.கொலைக்கான காரணம் என்ன:
கடந்தாண்டு நவீனா கார்டன் பகுதியில் நடந்த விக்கி கொலையில் ஆனந்த் முக்கிய குற்றவாளியாக இருந்துள்ளார். அவர் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் வீண் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். வரும் 30ம் விக்கி கொலையாகி ஒரு ஆண்டு முடிகிறது. இதனால், விக்கி கொலைக்கு பழிதீர்க்க அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமாக என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மூடிய சாலையில்
கொலை நடந்தது எப்படி:
கொலை நடந்த இ.சி.ஆரில் கடந்த சில நாட்களுக்கு முன் மின் கேபிள் புதைக்க சாலையொரம் பள்ளம் தோண்டப்பட்டது. பின் அந்த சாலை மீண்டும் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், கிருஷ்ணா நகர் சந்திப்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆனந்தை எந்த வழியாக பைக்குகளில் விரட்டி சென்று கொலை செய்தனர் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வீடியோ வைரல்:
ஆனந்தை ஒரு கும்பல் பைக்குகளில் விரட்டி சென்று சரமாரியாக வெட்டிக் கொல்லும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில், வைரலாகி வருகிறது.
