ADDED : ஜூலை 24, 2026 06:24 AM
பாகூர்: பாகூர் அடுத்த மணமேடு பகுதியில் குட்கா விற்பதாக வந்த புகாரின் பேரில், போதை தடுப்பு பிரிவு மற்றும் கரையாம்புத்துார் போலீசார் இணைந்து, மணமேடு பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
மணமேட்டைச் சேர்ந்த செழியன்,36; ரவிக்குமார், 28, ஆகியோரது கடைகளில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்றது தெரிந்தது. விசாரணையில், கரையாம்புத்துாரை சேர்ந்த ஜெயக்குமார்,66; குட்கா பொருட்களை சப்ளை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 110 கிலோ குட்கா பொருட்கள், 4,000 ரொக்கம், 4 மொபைல் போன்கள், 2 பைக்குளை பறிமுதல் செய்தனர்.
அதே போல், திருக்கனுாரில் பள்ளி அருகில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட சிகரெட், பீடி மற்றும் குட்கா பொருட்கள் விற்பதாக வந்த புகாரை தொடர்ந்து, திருக்கனுார் உதவி சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அந்த கடைகளில் சோதனை நடத்தினர். புதுநகர், சோம்பட்டு பகுதிகளில் நான்கு கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 70 கிலோ குட்கா, சிகரெட், பீடிகளை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வழக்கு பதிந்து திருக்கனுார் பாலகிருஷ்ணன்,56; புருேஷாத்தமன்,63; நடராஜன்,70; சோம்பட்டு கண்ணன்,63; ஆகியோரை கைது செய்தனர்.
