UPDATED : அக் 18, 2026 12:00 AM
ADDED : அக் 17, 2026 11:28 PM
விழுப்புரம்: ஓய்வு பெற்ற வங்கி மேலாளரை ஏமாற்றி, ரூ.1.52 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா, பட்டானுார் பகுதியை சேர்ந்தவர் அருணகிரி,69; ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவரது மொபைல் போனிற்கு, நேற்று முன்தினம் பேசிய மர்ம நபர் ஒருவர், தனியார் வங்கி கிளை மேலாளர் என அறிமுகப்படுத்தி கொண்டு, குறைந்த வட்டியில் பலன் தரும் கிரெடிட் கார்டு ஆபர் உள்ளதால், அதனை வாங்கி தருவதாக கூறினார்.
இதனை நம்பிய அருணகிரி, அந்த மர்ம நபர் கூறியபடி வீடியோ காலில் பேசி, அவர் ஏற்கனவே வைத்திருந்த வங்கியின் கிரெடிட் கார்டு விவரங்களை பகிர்ந்துள்ளார். அடுத்த நாளில், அருணகிரிக்கு தெரியாமல், அவரது கிரெடிட் கார்டு கணக்கிலிருந்து, 4 தவணைகளாக ரூ.1.52 லட்சத்தை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர்.
இது குறித்து, அருணகிரி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
