/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்டாக் மாணவர்களுக்கு நிலுவை தொகை ரூ.17 கோடி! வங்கி கணக்கில் அரசு செலுத்தியது
/
சென்டாக் மாணவர்களுக்கு நிலுவை தொகை ரூ.17 கோடி! வங்கி கணக்கில் அரசு செலுத்தியது
சென்டாக் மாணவர்களுக்கு நிலுவை தொகை ரூ.17 கோடி! வங்கி கணக்கில் அரசு செலுத்தியது
சென்டாக் மாணவர்களுக்கு நிலுவை தொகை ரூ.17 கோடி! வங்கி கணக்கில் அரசு செலுத்தியது
ADDED : ஜன 16, 2026 06:56 AM

புதுச்சேரி: நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்தின்ரூ. 17 கோடி நிலுவை தொகையை வங்கி கணக்கில் அரசு செலுத்தியுள்ளது. புதுச்சேரி அரசு, காமராஜர் கல்வி திட்டத்தின் கீழ் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு ரூ.2.25 லட்சமும், பி.டெக்., படிப்பிற்கு ரூ.25 ஆயிரம், நர்சிங் படிப்பிற்கு ரூ.8,000 நிதியுதவி வழங்கி வருகின்றது. இத்திட்டதால் ஏழை மாணவர்களின் உயர் கல்வி கனவு நனவாகி வருகிறது.
வழக்கமாக, காமராஜர் கல்வி திட்ட நிதி காலத்தோடு வழங்கப்பட்டு விடும். ஆனால், கடந்த 2022ம் ஆண்டு முதல் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு காமராஜர் திட்டத்தின் கீழ் நிதியுதவி இன்னும் வழங்கப்படவில்லை. இத்திட்டத்தின் கீழ் கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
குறிப்பாக, கடந்த 2022ம் கல்வியாண்டில் சேர்ந்த இன்ஜினியரிங் உள்ளிட்ட மாணவர்கள் இறுதியாண்டிற்கு வந்து விட்டனர். சில மாதங்களில் இறுதி செமஸ்டர் எழுதி படிப்பினையே முடிக்க உள்ளனர். ஆனால் இன்னும் காமராஜர் திட்ட நிதியுதவி கிடைக்காத சூழ்நிலையில் அவர்களுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இரண்டு செமஸ்டருக்குள் பணத்தை கட்டு; இல்லையெனில் இறுதியாண்டு செமஸ்டர் எழுத முடியாது என்று கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை திரட்ட வேண்டிய சூழ்நிலையில் பெற்றோர்களும் அலைந்து திரிந்து வந்தனர். இந்நிலையில், முதல்வர் ரங்கசாமியின் உத்தரவின்பேரில் உயர் கல்வித் துறை, சென்டாக் மூலம் கல்லுாரியில் சேர்ந்த மாணவர்களுக்கு இப்போது காமராஜர் கல்வி நிதியாக ரூ.17 கோடியை 3,398 மாணவர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது.
இறுதியாண்டு
தனித்தனியாக பார்க்கும்போது கடந்த 2021-22ம் ஆண்டு இறுதியாண்டு எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் படித்த 299 மாணவர்களுக்கு 3 கோடியே 14 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
முதலாமாண்டு
2022-23ம் ஆண்டில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., படித்த 139 பேர், பி.எஸ்.சி., நர்சிங் படித்த 195 மாணவிகள், இன்ஜினியரிங் படித்த 1115 பேர், பி.டெக்.,லேட்ரல் என்ட்ரியில் சேர்ந்த 92 பேர் என மொத்தம் 1,541 பேருக்கு 6 கோடியே 29 லட்சத்து,85 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 2023-24ம் கல்வியாண்டில் முதலாமாண்டில் சேர்ந்த எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் 195 பேர், பி.எஸ்சி., நர்சிங் 178 பேர், பி.டெக்., பயின்ற 1117 பேர், பி.டெக்., லேட்ரல் 68 பேர் என 1558 பேருக்கு 7 கோடியே 59 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி 2024-25ம் ஆண்டு நிலுவை தொகையினை தருவதற்கான நடவடிக்கைகளை உயர்கல்வி துறை முடுக்கிவிட்டுள்ளது.

