ரூ.3 லட்சம் வைரக் கல் பதித்த மாணவியின் வளையல் மாயம்
ரூ.3 லட்சம் வைரக் கல் பதித்த மாணவியின் வளையல் மாயம்
UPDATED : ஆக 22, 2026 07:33 PM
ADDED : ஆக 22, 2026 07:22 PM
புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவியின் ரூ. 3 லட்சம் மதிப்பிலான வைரக் கல் பதித்த தங்க வளையல் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு, கரூர், வையாபுரி நகரைச் சேர்ந்தவர் கமல் மகள் பிரஹதாரணி, 20; புதுச்சேரி, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 4ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர் பல்கலைக்கழகம் அருகேயுள்ள மாணவிகள் விடுதியில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி இரவு பிரஹதாரணி தலையில் தேய்த்து குளிப்பதற்காக, கையில் வைத்திருந்த எண்ணெய் பாட்டில் கீழே விழுந்து உடைந்தது. இதையடுத்து, பிரஹதாரணி தனது கையில் அணிந்திருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான வைரக்கல் பதித்த தங்க வளையலை, அறையில் உள்ள மேசையின் மீது கழட்டி வைத்து விட்டு, கீழே விழுந்த எண்ணெயை சுத்தம் செய்தார்.
பின், மேசையில் கழட்டி வைத்த வளையலை மீண்டும் அணிவதற்கு மறந்து, இரவு துாங்கி உள்ளார். மறுநாள் காலை 10 மணிக்கு பிரஹதாரணி கல்லுாரி புறப்பாடு செல்லும் முன், கழட்டி வைத்த வளையலை மேசையில் பார்த்தபோது காணவில்லை.
இதையடுத்து, அறையில் இருந்த தோழிகளிடம், வளையல் காணமால் போனது குறித்து விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பிரஹதாரணி நேற்று காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
