ADDED : செப் 26, 2026 05:32 PM
பாகூர்: பாகூர் அருகே பெட்ரோல் பங்கில் 36 லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாய் கையாடல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, வைத்திக்குப்பம் பாப்பம்மாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கராஜூ, 46. இவர், பாகூர் அருகே உள்ள அரங்கனுார் கிராமத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். இந்த பெட்ரோல் பங்கில், கடலுார் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த கமலநாதன் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார்.
தொழிலதிபரான ரங்கராஜ் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதால், அவரால் பெட்ரோல் பங்கின் கணக்கு வழக்குளை அவ்வப்போது சரி பார்க்க முடியாமல் இருந்து வந்தது.
இதனிடையே, ரங்கராஜூ கடந்த ஆண்டு, இந்த பெட்ரோல் பங்கினை, வேறு ஒரு நபரிடம் ஒப்படைத்துள்ளார். அப்போது, அவர், பெட்ரோல் பங்கின் வரவு, செலவு கணக்குகளை சரி பார்த்தார். அதில், கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2025ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி வரையிலான கால கட்டத்தில், 36 லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாய் கணக்கில் வராமல் கையாடல் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து, ரங்கராஜ், அப்போதைய மேலாளரான கமலநாதனிடம் கேட்டுள்ளார். அதற்கு, அவர் அந்த பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறி, கால தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
பணம் கொடுக்கப்படாத நிலையில், இது குறித்து ரங்கராஜ், பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
