ரூ. 3.75 லட்சம் ‘குட்கா’ பறிமுதல் சேதரப்பட்டு அருகே 5 பேர் கைது
ரூ. 3.75 லட்சம் ‘குட்கா’ பறிமுதல் சேதரப்பட்டு அருகே 5 பேர் கைது
ADDED : செப் 11, 2026 07:52 PM
வில்லியனுார்: சேதராப்பட்டு அருகே குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
சேதராப்பட்டு அடுத்த கரசூர், மேட்டுத் தெருவில் ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்று, சம்மந்தப்பட்ட வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
வீட்டில் பதுக்கிவைத்திருந்த 386 கிலோ மதிப்பிலான கூல்லீப், விமல் பேக், ஹான்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சேதராப்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன் மதிப்பு 3.75 லட்சம் ரூபாயாகும்.
சேதராப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முகமது அலாவுதீன், விசாரணை மேற்கொண்டதில் போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்த வானுார் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த வெங்கடேசன், 29; வானுார், பச்சைவாழியம்மன் நகரை சேர்ந்த முகமது யூசுப், 36; கரசூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த கந்தசாமி, 75; மொரட்டாண்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன், 48; வளவனுார் குவார்ட்டர்ஸ் தெருவைச் சேர்ந்த பிரபாகரன், 28, ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, அவர்களை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார், இரு மோட்டார் பைக்குகளை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
