ADDED : மார் 20, 2026 07:33 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். லாஸ்பேட்டை, சாமிபிள்ளைத்தோட்டத்தில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு, தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப் போன்ற ரூ. 3 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான 208 கிலோ குட்கா பொருட்கள் 13 வெள்ளை சாக்குப்பைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர், லாஸ்பேட்டை, சாமிபிள்ளைத்தோட்டம், 5வது குறுக்கு தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் பாஸ்கர், 45; மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
இதேபோல், கோரிமேடு பூத்துறை செல்லும் ரோட்டில் உள்ள பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 1,400 மதிப்பிலான குட்கா பொருட்களை டி.நகர் போலீசார் பறிமுதல் செய்து, உரிமையாளர் அமரேசன், 55; மீதும், மூலக்குளம், வில்லியனுார் ரோட்டில் உள்ள கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.2,500 மதிப்பிலான குட்கா பொருட்களை ரெட்டியார்பாளையம் போலீசார் பறிமுதல் செய்து, உரிமையாளர் பாலாஜி, 55; மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
