ஒருங்கிணைந்த நகர்ப்புற வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.4,750 கோடி: பட்ஜெட் உரையில் கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்
ஒருங்கிணைந்த நகர்ப்புற வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.4,750 கோடி: பட்ஜெட் உரையில் கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்
ADDED : ஆக 25, 2026 03:39 AM

புதுச்சேரி: ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியோடு, 4,750 கோடி மதிப்பீட்டில் புதுச்சேரி ஒருங்கிணைந்த நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என கவர்னர் கைலாஷ்நாதன் தெரிவித்தார். புதுச்சேரி சட்டசபையின் 16-வது பட்ஜெட் கூட்டத் தொடரை துவக்கி வைத்த கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது:
2024--25ம் நிதியாண்டில் ரூ.12.346.80 கோடியாக இருந்த மொத்த வருவாய், 2025--26 ம் நிதியாண்டில் ரூ.13,397.69 கோடியாக உயர்ந்து 8.51 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதேபோல், புதுச்சேரியின் சொந்த வருவாய் ரூ.6,848.29 கோடியிலிருந்து ரூ.7.631.53 கோடியாக உயர்ந்து 11.44 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
2024--25ம் நிதியாண்டில் ரூ.12,307.66 கோடி யாக இருந்த மொத்தச் செலவினம், 2025--26ம் நிதியாண்டில் ரூ.13,111.45 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 6.53 சதவீதம் அதிகம். குறிப்பாக, மூலதனச் செலவினம் ரூ.447.48 கோடியிலிருந்து ரூ.765.59 கோடியாக உயர்ந்து 71.09 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2020--21ம் ஆண்டில் மைனஸ் 2.21 சதவீதமாக இருந்த மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், 2025--26ம் ஆண்டில் 8.12 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி, தேசிய வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாக உள்ளது.
அரசு துறைகளில் பல ஆண்டுகளாக காலியாக இருந்த பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த ஆண்டில் 1,000 புதிய பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பும் வெளியிடப்படும்.
உழவர்கரை நகராட்சி - தட்டாஞ்சாவடியில் மத்திய அரசின் ஒப்புதலோடு ரூ.725 கோடி மதிப்பீட் டில் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்பட உள்ளது. இந்திய அளவில், நகர்புற உள்ளாட்சி அமைப்பால் உருவாக்கப்படும் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம் இதுவாகும். இந்தத் திட்டத்தின் மூலம் அடுத்த பத்து ஆண்டுகளில் 30,000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
பன்முக சிறப்புப் பொருளாதார மண்டலம் கரசூரில், பன்முக சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. பிப்டிக் நிறுவனம் செயல்படுத்தும் இந்தத் திட்டம். புதுச்சேரியின் தொழில்துறை வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும். மேலும், புதுச்சேரியின் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலமாகவும் இது அமையும்.
இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் தனியார் பங்களிப்புடன் ரூ.2,500 கோடி முதலீட்டில், 213.12 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் அடுத்த பத்து ஆண்டுகளில் 40,000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ஆசிய வளர்ச்சி வங்கி மத்திய அரசின் ஒப்புதலோடு நகர்ப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியோடு, 4,750 கோடி மதிப்பீட்டில் புதுச்சேரி ஒருங்கிணைந்த நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் நரம்பையில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம், ரூ.150 கோடி மதிப்பீட்டில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம், காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் வழங்கும் திட்டம், புதுச்சேரியில் ரூ.550 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் பாதாள சாக்கடை வசதிகள் உள்ளிட்ட பல முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், வடிகால் வசதிகள், கால்வாய்கள், கடற்கரை நடைபாதை, பெரிய வாய்க்கால், சாலைகள் மற்றும் பாலங்களும் மேம்படுத்தப்படும். இந்தத் திட்டம் நிறைவடைந்தால், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் மேம்படும். நகர்ப்புற உள்கட்டமைப்பு வலுப்பெறும்.
இவ்வாறு கவர்னர் பேசினார்.
