/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.500 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்... இடம் மாறுகிறது: தெற்கு கடலோர பகுதியில் செயல்படுத்த பரிந்துரை
/
ரூ.500 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்... இடம் மாறுகிறது: தெற்கு கடலோர பகுதியில் செயல்படுத்த பரிந்துரை
ரூ.500 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்... இடம் மாறுகிறது: தெற்கு கடலோர பகுதியில் செயல்படுத்த பரிந்துரை
ரூ.500 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்... இடம் மாறுகிறது: தெற்கு கடலோர பகுதியில் செயல்படுத்த பரிந்துரை
ADDED : அக் 09, 2025 01:59 AM

புதுச்சேரி: கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தினை வேறு பகுதிக்கு மாற்றுவது குறித்த ஆய்வுக்குழுவின் பரிந்துரையை,புதுச்சேரி அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. புதுச்சேரியில் குடிநீர், சாலை, பாதாள சாக்கடை திட்டம், நெரிசலை சமாளிக்கும் கட்டமைப்பு மற்றும் உப்பு நீக்கும் ஆலையை அமைப்பதற்காக ஆசிய வளர்ச்சி வங்கி மூலம், ரூ.4,750 கோடி கடன் பெற்று, அடுத்த 5 ஆண்டுகளில் முடிக்கும் திட்டத்திற்கு, மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது.
இது புதுச்சேரி வரலாற்றில் மிகப்பெரிய உட்கட்டமைப்பு வசதி கொண்ட திட்டமாகும்.
இந்த திட்டங்களில், முத்தாய்ப்பாக 50 எம்.எல்.டி., கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம், ரூ.500 கோடியில் துவங்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இருப்பினும், இந்த மெகா குடிநீர் திட்டத்தை புதுச்சேரி நகர பகுதியையொட்டியுள்ள கடலோர பகுதியில் மேற்கொள்ளாமல் வேறு பகுதிக்கு மாற்றலாம் என, அரசு தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திப்புராயபேட்டையில் துவங்கலாம். அதன் மூலம் தினசரி கிடைக்கும் 50 எம்.எல்.டி., குடிநீரை நகர பகுதி முழுதும் விநியோகம் செய்யலாம்.
இதன் மூலம் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் கிடைக்கும் என்பது பொதுப்பணித் துறையின் தொழில்நுட்ப வல்லுநர்களின் முதற்கட்ட பரிந்துரையாக உள்ளது.
இருப்பினும், சமீபத்தில் அரசுக்கு கிடைத்த கசப்பான அனுபவம் காரணமாகவே இந்த திட்டத்தை வேறு கடலோர பகுதிக்கு மாற்றி, அங்கிருந்து குழாய்கள் மூலம் புதுச்சேரிக்கு நகர பகுதிக்கு குடிநீரை கொண்டு வருவது தான் சிறந்தது என்றும் மற்றொரு பரிந்துரை இப்போது அரசின் முன் வைக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம் புதுச்சேரி நகர பகுதியில் கோவிந்த சாலை உள்பட பல்வேறு பகுதிகளில், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பு சம்பவங்கள் நடந்தன.
குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் தான், இந்த துயர சம்பவம் நடந்ததாக பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர்.
இது போன்ற சூழ்நிலையில், திப்புராயபேட்டையில் ரூ. 500 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தினால், மீண்டும் அதே சிக்கல் தான். காரணம். திப்புராயப்பேட்டை சுற்றி உப்பனாறு செல்கிறது.
இந்த கழிவு நீரை சுத்திகரித்து கடலில் விடப்பட்டாலும், அதன் அருகில் இத்திட்டத்தை செயல்படுத்தினால் மீண்டும் இதேபோல் பிரச்னை ஏற்படும். குறிப்பாக கடலில் கலக்கும் உப்பனாறு கழிவு நீரை தான் சுத்திகரித்து பொதுமக்களுக்கு மீண்டும் தருகின்றீர்கள்.
அதற்கு எதற்கு கடலில் இந்த திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். நேரடியாக உப்பனாற்றில் ஆரம்பித்து விடுவது தானே என்றும், இது குடிப்பதற்கு உகந்தது இல்லை என்றும் போராட்டம் நடத்துவார்கள். அதன் பிறகு இந்த திட்டத்தை செயல்படுத்த கூடாது என, அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் வரை சென்று முடக்குவார்கள்.
அப்புறம் கடல் ஆய்வு, வழக்கு, வாய்தா என்று பல ஆண்டுகள் உருண்டோடி விடும். அதற்குள் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான தொழிற்சாலையும் இருந்த இடம் தெரியாமல் ஒரேயடியாக முடிவுக்கு வந்துவிடும்.
இதனால் தான் ஆரம்பிக்கும்போதே பிரச்னை இல்லாமல், தெற்கு கடலோரம் 18 கி.மீ., தொலைவில் இத்திட்டத்தை ஆரம்பித்து அங்கிருந்து குழாய் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கொண்டு வரலாம் என்று தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தீவிர ஆலோசனையை புதுச்சேரி அரசு நடத்தி வருகிறது.