/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 600 கோடி ஈரடுக்கு மேம்பால திட்டத்தில்... மாற்றம் வருகிறது; மத்திய-, மாநில அரசுகள் திடீர் ஆலோசனை
/
ரூ. 600 கோடி ஈரடுக்கு மேம்பால திட்டத்தில்... மாற்றம் வருகிறது; மத்திய-, மாநில அரசுகள் திடீர் ஆலோசனை
ரூ. 600 கோடி ஈரடுக்கு மேம்பால திட்டத்தில்... மாற்றம் வருகிறது; மத்திய-, மாநில அரசுகள் திடீர் ஆலோசனை
ரூ. 600 கோடி ஈரடுக்கு மேம்பால திட்டத்தில்... மாற்றம் வருகிறது; மத்திய-, மாநில அரசுகள் திடீர் ஆலோசனை
ADDED : நவ 11, 2024 07:34 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் 600 கோடி ரூபாயில் அமைய உள்ள ஈரடுக்கு மேம்பால திட்டம் தொடர்பாக மத்திய அரசு சில கேள்விகளை எழுப்பியதால், அத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஆலோசித்து வருகின்றன.
புதுச்சேரி நகரில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. முக்கிய சிக்னல்கள் அனைத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. நத்தையை போல் வாகனங்கள் ஊர்ந்து செல்லுகின்றன. எனவே போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புதிய மேம்பாலங்கள் கட்டுவது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும் என்பதால், இந்திரா சிக்னல்- ராஜிவ் சிக்னலை இணைத்து மேம்பாலம் கட்ட புதுச்சேரி அரசு முடிவு செய்தது.
அதற்கான, விரிவான திட்டத்துடன் கருத்துருவாக்கம் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு, மத்திய சாலை அமைச்சகமும் ஒப்புதல் தந்த நிலையில் இன்னும் புதிய மேம்பாலம் கட்டப்படவில்லை. இத்தனைக்கும் மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான ஆட்சி நடந்து வரும் சூழ்நிலையிலும், மேம்பால பணி துவங்கப்படவில்லை.
இதற்கிடையில், புதுச்சேரியில் 600 கோடி ரூபாயில் அமைய உள்ள ஈரடுக்கு மேம்பால திட்டம் தொடர்பாக, மத்திய அரசு சில கேள்விகளை எழுப்பியுள்ளது. எனவே, அத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஆலோசித்து வருகின்றன.
இதற்கு ஏற்ப மத்திய பொதுப்பணித் துறையை சேர்ந்த அதிகாரியும் புதுச்சேரியில் முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றார்.
இந்திரா சிக்னல் முதல் ராஜிவ் சிக்னல் வரை 1.5 கி.மீ., தொலைவிற்கு ஈரடுக்கு பாலமும், அந்த பாலத்தில் இருந்து 240 மீட்டர் தொலைவிற்கு இறங்கு சாலை அமைக்கப்பட உள்ளது. அடுத்து தரை சாலையில் இருந்து 5.5 மீட்டர் உயரத்துக்கு, 7 மீட்டர் அகலத்திற்கு கீழடுக்கு பாலம் அமைகிறது.
இதேபோல், இந்திரா சிக்னல் சதுக்கத்தில் மேலடுக்கு பாலமானது தரையில் இருந்து 11 மீட்டர் உயரத்தில் அமைகிறது. அது நான்கு வழிச்சாலைக்கான 15.60 மீட்டர் அகலத்தில் அமைக்க கருத்துவாக்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலம் தரை, கீழடுக்கு, மேலடுக்கு என அமையும்போது எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க வசதியாக இருக்கும் என புதுச்சேரி அரசு கருதுகிறது. அதே வேளையில், ஈரடுக்கு மேம்பாலம் புதுச்சேரிக்கு சாத்தியப்படுமா என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்திரா சிக்னலில் இருந்து மரப்பாலம் வரை ஒரே மேம்பாலமாக கொண்டு சென்றுவிடலாம் என்று மத்திய சாலை அமைச்சகம் பரிந்துரைக்கின்றது. எனவே ஈரடுக்கு மேம்பாலத்தில் திட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசும், புதுச்சேரி அரசும் இணைந்து இந்த ஆலோசனையை மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆலோசனை ஒரு மாதத்திற்குள் முடித்து, மேம்பால பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் மத்திய சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ள சூழ்நிலையில், புதுச்சேரியில் ஆய்வுகளும் வேகமாக நடந்து வருகின்றன.