கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.700 கோடி:புதுச்சேரி அரசு மத்திய அரசிடம் கோரிக்கை
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.700 கோடி:புதுச்சேரி அரசு மத்திய அரசிடம் கோரிக்கை
UPDATED : செப் 01, 2026 10:07 PM
ADDED : செப் 01, 2026 10:03 PM

புதுச்சேரி: கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதிய அளிக்க வேண்டும் என, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கோரிக்கை வைத்துள்ளார்.
புதுடில்லியில் ஜல் சக்தி கூட்டம் நடந்தது. இதில் புதுச்சேரி அரசு சார்பில், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கலந்து கொண்டு ஜல்சக்தி அமைச்சகத்தின் மூலம் புதுச்சேரிக்கு தேவையான திட்டங்கள் குறித்து அவர், பேசியதாவது:
புதுச்சேரி தற்போது வீட்டு குடிநீர் வினியோகத்திற்கு முழுமையாகவும், பாசனத்திற்கு மேற்பரப்பு நீர் மற்றும் 9 மாதங்களுக்கு மேலாக நிலத்தடி நீரை மட்டுமே நம்பியுள்ளது. பல ஆண்டுகளாக நிலத்தடி நீரை தொடர்ந்து உறிஞ்சி வருதல், வேகமான நகரமயமாக்கல் மற்றும் அதிகரிக்கும் தேவையின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளது.
இதனால், கடல் நீர் ஊடுருவி, கடலோர நகர்ப்புறங்களில் தண்ணீரின் தரம் கெட்டுள்ளது. தற்போது நீர் தேவையின் அளவு நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் லிட்டராக உள்ளது. இதில் 71 கிணறுகள் மட்டுமே 34 மில்லியன் லிட்டர் நீரை தரமாக தருகின்றன. எனவே குடிநீர் ஆதாரங்களை மாற்ற வேண்டிய அவசர தேவை உள்ளது.
மேற்பரப்பு நீர் அதிகரிப்பு, ஏரிகள், ஆறுகள், கடல் நீரை குடிநீராக்குதல், நீர் பாதுகாப்பு மற்றும் நவீன வினியோக உட்கட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நீண்டகால நீர்பாதுகாப்பு யோசனையை உருவாக்கியுள்ளது.
குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நரம்பையில் ரூ.700 கோடி செலவில் 50 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க முன்மொழியப்பட்டு, அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலை அமைக்க மத்திய அரசு மானிய உதவியை அளிக்க வேண்டும்.
மேலும் வானுார் மணற்பாறை அமைப்பில் ஆய்வு செய்து, ஊசுடு ஏரியை மேம்படுத்துதல், நெய்வேலியில் சுரங்கத்தில் இருந்து கச்சா நீர் அளவு அதிகரிப்பு, மற்றும் 50 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை இணைக்கும் ரிங் மெயின் முயற்சிகளும் இதில் அடங்கும்.
பழுதுபார்த்தல், புதுப்பித்தல் மற்றும் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் விரிவான சீரமைப்பிற்கு 78 குளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவைகளில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு ரூ.421.76 கோடி மதிப்பிலான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சங்கராபரணி மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் தடுப்பணைகள், கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் முன்மொழியப்பட்டுள்ளன. பாகூர், கிருமாம்பாக்கம், அபிஷேகபாக்கம், கோர்க்காடு மற்றும் ஊசுட்டேரி ஆகிய ஏரிகள் கூடுதல் குடிநீர் ஆதாரங்களாக மேம்படுத்த முன்மொழியப்பட்டுள்ளன. இதன் மூலம் குடிநீர் கிடைப்பது அதிகரிக்கும்.
கிருஷ்ணா - கோதாவரி, தென்பெண்ணை - காவிரி நதிகள் இணைப்பு திட்டம், மாநிலத்தின் நீண்டகால நீர் பாதுகாப்பிற்கு முக்கியமானது. எனவே புதுச்சேரி அரசு ஏற்கனவே தேசிய நீர் மேம்பாட்டு முகமையிடம் புரிந்துணர்வு ஒப்பந்த வரைவை சமர்ப்பித்துள்ளதுடன், முதல் கட்டத்திலேயே குடி நீர் மற்றும் பாசன தேவைகளுக்கு 5.55 டி.எம்.சி., நீரை ஒதுக்கீடு செய்ய கோரியுள்ளது. நதிகள் இணைப்பு திட்டத்தில், புதுச்சேரியின் தேவைகளை பாதுகாக்கவும் மத்திய அரசு ஆதரவு தர வேண்டும்.
புதுச்சேரியின் முக்கிய தேவைகளில் ஒன்று தமிழகப்பகுதியான சாத்தனுார் அணையில் இருந்து, புதுச்சேரிக்கு குழாய் மூலம் 100 மில்லியன் லிட்டர் நீரை பெறுவதாகும். தற்போதுள்ள ஒப்பந்தப்படி சொர்ணாவூர் அணைக்கட்டிலிருந்து, பங்காரு வாய்கால் வழியாக பருவ கால நீர் மட்டுமே பெறப்படுகிறது. எனவே தமிழகம், புதுச்சேரி அரசுகளை கொண்ட கூட்டுக் குழுவை அமைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
