/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி தங்க கட்டி கொடுத்து ரூ.80 லட்சம் நகை 'அபேஸ்'
/
போலி தங்க கட்டி கொடுத்து ரூ.80 லட்சம் நகை 'அபேஸ்'
ADDED : ஜூலை 21, 2025 01:44 AM
புதுச்சேரி: போலி தங்க கட்டிகளை கொடுத்து ஏமாற்றி, 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை வாங்கி சென்றவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
புதுச்சேரி, பாரதி வீதியை சேர்ந்தவர் தீபக்தாஸ், 50. இவர் பாரதி வீதியில் நகைக்கடை வைத்துள்ளார். இவரிடம், சேலத்தை சேர்ந்த சந்திப் ஜனா என்பவர், சில மாதங்களுக்கு முன் நகை வியாபாரம் செய்து வருவதாக அறிமுகமானார்.
அதில், தன்னிடம், 60 கிராம் தங்கக்கட்டி உள்ளதாகவும், அதை பெற்றுக்கொண்டு நகையாக தரும்படி கேட்டுள்ளார்.
அதை வாங்கி, தீபக் தாஸ் பரிசோதனை செய்தபோது, தங்கம் என உறுதியானதால், அதற்கு பதிலாக நகைகளை கொடுத்தார்.
அதேபோல், மற்றொரு முறை தங்கக்கட்டிகளை கொடுத்து, நகைகளை வாங்கி சென்றார். நேற்று முன்தினம் இரவு தீபக் தாசை சந்தித்த, சந்திப் ஜனா தன்னிடம் 1.80 கிலோ, இரு தங்கக்கட்டிகள் உள்ளதாகவும், அதை பெற்றுக்கொண்டு, தங்க நகைகளை வழங்குமாறு கேட்டுள்ளார்.
சந்திப் ஜனாவிடம் இருந்த, 1.80 கிலோ எடை தங்கக்கட்டியை வாங்கிக் கொண்டு, தீபக் தாஸ் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 880 கிராம் நகைகளை கொடுத்தார்.
தங்க நகைகளை வாங்கிக்கொண்டு சந்திப் ஜனா சென்றுவிட்டார். அதன்பின், அவர், கொடுத்த தங்க கட்டிகளை சோதனை செய்தபோது, அது தங்கமுலாம் பூசப்பட்ட இரு காப்பர் கட்டிகள் என, தெரியவந்தது. சந்திப் ஜனா மீது பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.