/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கு கூடுதலாக... ரூ.200 கோடி அனுமதி; நகர்ப்புற விவகார அமைச்சகம் தாராளம்
/
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கு கூடுதலாக... ரூ.200 கோடி அனுமதி; நகர்ப்புற விவகார அமைச்சகம் தாராளம்
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கு கூடுதலாக... ரூ.200 கோடி அனுமதி; நகர்ப்புற விவகார அமைச்சகம் தாராளம்
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கு கூடுதலாக... ரூ.200 கோடி அனுமதி; நகர்ப்புற விவகார அமைச்சகம் தாராளம்
ADDED : அக் 28, 2024 05:02 AM
புதுச்சேரி : புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டம், ரூ.620 கோடியாக சுருங்கிய நிலையில், கூடுதலாக 200 கோடி ரூபாய்கான திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசின் நகர்ப்புற விவகார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் குறிப்பிட்ட நகரங்களை தேர்வு செய்து அங்கு அனைத்து வசதிகளையும் மேம்படுத்தி ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்கும் திட்டம் மத்திய அரசால் 2015-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் மூன்றாம் கட்டத்தில் புதுச்சேரிக்கு ஸ்மார்ட் சிட்டியை உருவாக்க மத்திய அரசு கடந்த 2017ல் அனுமதி கொடுத்தது. இதன்படி புதுச்சேரி நகர பகுதியில் 1468 ஏக்கர் பரப்பளவில் திட்ட மதிப்பீடு 1,828 கோடி ரூபாயில் பணிகள் நடக்க தடபுடலாக திட்டங்கள் தீட்டப்பட்டன.
படுவேகத்தில் நடந்து அரங்கேறி இருக்க வேண்டிய திட்ட பணிகள் புதுச்சேரியில் படு மந்தமாக நடந்தது. இதனால், திட்டமிட்டப்படி கடந்த ஜூன் மாதத்திற்குள் ஸ்மார்ட் சிட்டி பணிகளை முடிக்க முடியவில்லை. ஒருவழியாக அடுத்தாண்டு, மார்ச் 31ம் தேதி வரை எஞ்சியுள்ள ஸ்மார்ட் பணிகளை முடிக்க காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்து கொடுத்தது.
இது போன்ற சூழ்நிலையில், புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 200 கோடி ரூபாய் செலவில், கூடுதலாக பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் நகர்ப்புற விவகார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் கிடைத்துள்ளது. போதிய காலஅவகாசம் இல்லாததால் பல பெரிய திட்டங்கள் கைவிடப்பட்டன. குறிப்பாக, குபேர் மார்க்கெட் உள்பட பல்வேறு திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.
இதனால் கிடப்பில்போடப்பட்ட பல்வேறு திட்டங்களை மீண்டும் எடுத்து செயல்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கூடுதலாக கிடைக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம், இ.சி.ஆர்., பஸ்டாண்ட் மரப்பாலம் சிக்னல் மேம்பாடு, நேரு வீதி பழைய சிறை சாலையை பல அடுக்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.
820 கோடிக்கு திட்டப்பணி
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடைசியாக புதுச்சேரி அரசு 1048 கோடி ரூபாய் அளவிற்கு திட்டப் பணிகளை அனுப்பி இருந்தது. ஆனால், யூனியன் பிரதேசங்களுக்கு 930 கோடிக்குள்ளாக திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது. இதன் காரணமாக ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் பெரிய மார்க்கெட் உள்பட பல்வேறு திட்டங்களை கைவிட்டு, இறுதியாக 620 கோடி ரூபாய் மட்டுமே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை இறுதி செய்யப்பட்டது.
தற்போது கூடுதலாக மத்திய அரசு 200 கோடி திட்டங்களை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளதால் புதுச்சேரியின் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் 820 கோடி ரூபாய் முடிகிறது. இந்த பணிகளையாவது திட்டம் தீட்டுகின்றோம் என்று ஜவ்வாக இழுத்து கொண்டு இருக்காமல், காலத்தோடு எடுத்து முடிக்க வேண்டும்.

