/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு செயல்திட்டம்
/
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு செயல்திட்டம்
ADDED : ஜன 13, 2025 06:26 AM

கள்ளக்குறிச்சி : ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் நுாற்றாண்டு செயல்திட்டமாக, சமுதாய நல்லிணக்கம், ஹிந்து குடும்ப நல மேம்பாடு, தன்னை அறிதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடிமக்கள் கடமை ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளது என, இயக்கத்தின் தென்பாரத மக்கள் தொடர்பு பிரிவு செயலாளர் பிரகாஷ் கூறினார்.
கள்ளக்குறிச்சி பாரதமாதா நுாலகத்தில் விவேகானந்தரின் 162வது ஜெயந்தி விழாவையொட்டி, ஆர்.எஸ்.எஸ்., தென்பாரத மக்கள் தொடர்பு பிரிவு செயலாளர் பிரகாஷ் கூறியதாவது:
இந்தியாவை தீண்டாமை இல்லாத நாடாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் நுாற்றாண்டை கடந்து செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தினசரி ஒரு லட்சம் சந்திப்பு கிளை கூட்டம், 25,000 வாராந்திர கூட்டம், 10,000 மாதாந்திர சந்திப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் நுாற்றாண்டு செயல்திட்டமாக, சமுதாய நல்லிணக்கம், ஹிந்து குடும்ப நல மேம்பாடு, தன்னை அறிதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடிமக்கள் கடமை ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இணை அமைப்பு நிர்வாகிகள், தினமும் அனைவரிடமும் இன்முகத்துடன் பழக வேண்டும். நமது குடும்பத்துடன் வாரம் ஒருமுறை கோவிலுக்கு செல்ல வேண்டும். நாம் எல்லாரும் கட்டாயம் பிற மொழி கலப்பில்லாமல் தாய் மொழியில் பேச வேண்டும். கலாசார உடை அணிவதுடன், சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.
மழைக்காக மரக்கன்று நடுவதுபோல், பழ மரங்களை நட்டு வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும். உணவு பொருட்கள், குடிநீரை வீணாக்க கூடாது. நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதை நாம் பழக்கமாக்கி கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட 5 செயல்திட்ட பணிகளை கடைபிடிப்பதுடன், நாட்டின் 144 கோடி மக்களுக்கும் இதனை பழக்கப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் மகாதேவன், மாவட்ட பொது செயலாளர் சுரேஷ், வட தமிழக ஊடக பிரிவு செயலாளர் சந்திரசேகரன், மதனகோபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.