/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செயற்கைகோள் துணையுடன் நில அளவை பணி துவக்கம்
/
செயற்கைகோள் துணையுடன் நில அளவை பணி துவக்கம்
ADDED : அக் 09, 2025 02:03 AM

புதுச்சேரி: முருங்கப்பாக்கத்தில் செயற்கைகோள் துணையுடன் நில அளவை செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பழைய சங்கிலி முறை நில அளவைக்கு மாற்றாக அறிவியல் உபகரணங்களை கொண்டு செயற்கை கோள்கள் துணையுடன் புதிய முறையில் நில அளவை செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி முருங்கப்பாக்கம் வருவாய் கிராமம் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசு நில வளங்கள் துறையின் பங்களிப்புடன் கடந்த மார்ச் மாதம் டிரோன்களைக் கொண்டு நில அளவைக்காக புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக முருங்கப்பாக்கம் தீரர் சத்யமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் புதிய நில அளவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்வர் ரங்கசாமி, எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், சம்பத் ஆகியோர் முன்னிலையில் நில அளவைப் பணிகள் துவங்கி வைக்கப்பட்டது. அந்த இடத்தில் தரைக் கட்டுபாட்டுப் புள்ளிக்கான அடையாள துாண் நிறுவும் பணிகள் தொடங்கப்பட்டன.
முதலில், அரசு இடங்கள், கட்டடங்கள், நகராட்சிக்கு சொந்தமான இடங்கள், சாலைகள், பூங்காக்கள், சமுதாய நலக் கூடங்கள், பொழுதுபோக்கு இடங்கள், அரசு பொறுப்பில் உள்ள இடங்கள், மைதானங்கள், சாலைகள், மருத்துவ மனைகள், வாய்க்கால்கள் மற்றும் இதர பொதுப் பயன்பாட்டு இடங்கள், மத வழிப்பாட்டு இடங்கள் ஆகியவற்றை அளவீடு செய்யும் பணிகள் துவங்கப்பட்டன.
மத்திய அரசு நிலவளங்கள் துறையின் இயக்குநர் ஷ்யாம் குமார், கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் நில அளவைப் பணிகளை ஆய்வு செய்து, கள அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
மேலும் புதுச்சேரியில் முகாமிட்டுள்ள இந்திய நில அளவைத் துறை அதிகாரிகள் மற்றும் புதுச்சேரி நில அளவைப் பணிகளுக்கு தொழில் நுட்ப ஆலோசனை வழங்கும் மத்தியப் பிரதேச மாநில மின்னணு வளர்ச்சிக்கழக அதிகாரிகளுடனும் கலந்துரையாடினர்.
ஏற்பாடுகளை புதுச்சேரி அரசு நில அளவைத் துறை இயக்கக அதிகாரிகள் செய்திருந்தனர்.