/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போனில் மிரள வைக்கும் டிஜிட்டல் 'அரெஸ்ட்': புதுச்சேரியில் இதுவரை ரூ.5.21 கோடி பறிப்பு
/
போனில் மிரள வைக்கும் டிஜிட்டல் 'அரெஸ்ட்': புதுச்சேரியில் இதுவரை ரூ.5.21 கோடி பறிப்பு
போனில் மிரள வைக்கும் டிஜிட்டல் 'அரெஸ்ட்': புதுச்சேரியில் இதுவரை ரூ.5.21 கோடி பறிப்பு
போனில் மிரள வைக்கும் டிஜிட்டல் 'அரெஸ்ட்': புதுச்சேரியில் இதுவரை ரூ.5.21 கோடி பறிப்பு
ADDED : நவ 17, 2024 02:31 AM

அண்மைகாலமாக புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மொபைல்போனில் மர்ம அழைப்பு வருகிறது. மறுமுனையில் வீடியோ காலில் பேசும் நபர்கள், வெளிநாடுகளில் இருந்து உங்களுக்கு பார்சல் வந்துள்ளது.
அந்த பார்சலில் போதைப்பொருள் இருக்கிறது. மும்பை விமான நிலையத்தில் போதை பொருள் பார்சல் சிக்கி உள்ளது. போதைபொருள் கடத்தல் வழக்கில் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்கிறோம் என்று மிரட்டி வருகின்றனர்.
மர்ம நபரின் மிரட்டலால் அச்சமடைமடையும் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து போய் நிற்கின்றனர். நான் எந்த குற்றமும் செய்யவில்லை. என்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கெஞ்சி கேட்கின்றனர்.
எதிர்முனையில் மீண்டும் பேசும் மர்ம நபர்கள், பணம் கொடுத்தால் வழக்கில் இருந்து விட்டுவிடுவதாக கூறி, வங்கிக் கணக்கு விவரங்களை கேட்க, அதன்படி பணம் கொடுத்து புதுச்சேரியில் பலரும் ஏமாந்து வருகின்றனர். இந்தாண்டு மட்டும் 5.21 கோடி ரூபாயை இதுவரை டிஜிட்டல் அரெஸ்ட் விவகாரத்தில் இழந்துள்ளனர்.
எனவே, இந்த டிஜிட்டல் அரெஸ்ட் விஷயத்தில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் தங்களை சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சுங்கத் துறை அதிகாரிகள் போல அடையாளம் காட்டிக் கொள்வார்கள்.
பெரும்பாலான அழைப்புகள் இணையவழியில் வரும். பின்னர் வீடியோ அழைப்பில் இணையுமாறு சொல்லி பணம் பறிப்பார்கள்.
இது போன்ற டிஜிட்டல் அரெஸ்ட் ஏதும் அரசு அதிகாரிகள் செய்ய மாட்டார்கள். பணம் அல்லது வங்கி சார்ந்த விவரங்களை கேட்க மாட்டார்கள்.
இந்த மாதிரியான சூழலில் யாரும் பயப்பட வேண்டாம். விசாரணை அதிகாரி என பேசுபவர் மீது சந்தேகம் இருந்தால் அவர் குறிப்பிடும் துறையின் அலுவலகத்தை மொபைல்போன் வழியே தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டு விளக்கம் பெறலாம்.
அரசு அதிகாரிகள் வாட்ஸ் ஆப், ஸ்கைப் போன்றவற்றை தொலைத்தொடர்புக்கு பயன்படுத்துவதில்லை. தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்பில் தனிப்பட்ட மற்றும் வங்கி சார்ந்த விவரங்களை பகிர வேண்டாம்.
சந்தேகம் இருந்தால் புதுச்சேரி சைபர் கிரைம் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கியை தொடர்பு கொண்டு வங்கி கணக்கை முடக்க செய்யலாம். cybercrime.gov.in என்ற தேசிய சைபர் கிரைம் தளத்தில் புகார் அளிக்க வேண்டும். டிஜிட்டல் அரெஸ்டில் சிக்கி இருந்தால் புதுச்சேரி போலீசாரின் 1930 அல்லது 0413-2276144 என்ற எண்ணில் உதவிக்கு அழைக்கலாம்' என்றனர்.
உஷாரய்யா உஷாரு...

