பள்ளி வேன் – கார் மோதி விபத்து மாணவர்கள் காயமின்றி தப்பினர்
பள்ளி வேன் – கார் மோதி விபத்து மாணவர்கள் காயமின்றி தப்பினர்
ADDED : செப் 22, 2026 07:03 PM
பாகூர்: பாகூர் அருகே பள்ளி வேன், கார் மோதிக்கொண்ட விபத்தில், மாணவ, மாணவிகள் அதிஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
புதுச்சேரி – கடலுார் சாலை கன்னியக்கோவில் அடுத்த முள்ளோடையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று பள்ளி முடிந்து மாலை 4.00 மணியளவில், மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் புறப்பட்டு சென்றது. அதில், 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர். வேன் முள்ளோடை நான்கு முனை சந்திப்பு அருகே சென்ற போது, எதிரே வந்த மாருதி சுவீப்ட் கார், பள்ளி வேன் மோதியது.
இதனால், அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் கூச்சலிட்டுள்ளனர். உடனே, அங்கிருந்த பொது மக்கள் ஓடிச் சென்று வாகனத்தில் இருந்த மாணவ, மாணவிகளை பத்திரமாக மீட்டு, பள்ளிக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த விபத்தில், அதிஷ்டவசமாக மாணவர்கள் காயமின்றி தப்பினர். பின்னர், மாற்று வாகனம் மூலமாக மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வேன், கார் மோதிக்கொண்ட விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
